வேலூர் : வேலூர் மார்க்கெட்டுக்கு இஞ்சி, பூண்டு வரத்து சரிவை கண்டுள்ளதால் கடந்த சில நாட்களாக இஞ்சி மற்றும் பூண்டின் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் நேதாஜி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வருகிறது.
இதில் பெரிய வெங்காயம் கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் இருந்தும், இஞ்சி கேரளாவில் இருந்தும், பூண்டு மத்திய பிரதேசத்தில் இருந்தும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் முன்பு வரை இஞ்சியின் விலை ₹100க்குள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக ₹170 முதல் 180 வரை விற்பனையாகிறது.
அதேபோல் பூண்டு ₹50 முதல் ₹60 வரை விற்ற நிலையில் தற்போது ₹80 முதல் ₹140 வரையும், ஊட்டி பூண்டு ₹120 முதல் ₹180 வரையும் ரகத்துக்கேற்ப விற்பனையாகிறது.இதுதொடர்பாக வேலூர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘கேரளா, மத்திய பிரதேச மாநிலங்களில் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஓரிரு மாதங்கள் தொடரும். அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி அறுவடை தொடங்கி விடும். இதனால் வரத்து அதிகரிக்கும். அப்போது விலையிலும் மாற்றம் வரும்’ என்றனர்.
The post கேரளா, மத்திய பிரதேசத்தில் தொடர் மழை வேலூர் மார்க்கெட்டில் இஞ்சி, பூண்டு விலை உயர்வு appeared first on Dinakaran.