2047ல் இந்தியா வல்லரசாக மாற இலக்கு வைத்து ஒன்றிய அரசு செயல்படுகிறது

*ராணிப்பேட்டையில் பாஜக மாநில செயலாளர் பேட்டி

ராணிப்பேட்டை : 2047ல் இந்திய வல்லரசாக மாற இலக்கு வைத்து ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று பாஜக மாநில செயலாளர் ஆனந்தபிரியா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை பாரதிநகரில் பாஜக மாநில செயலாளர் ஆனந்தபிரியா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக 9 ஆண்டுகள் ஆட்சி முடிந்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இதனால், 2047ல் இந்தியா வல்லரசாக மாற இலக்கு வைத்து செயல்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பல திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதில் முத்ரா திட்டம், ஜன்தன் யோஜனா, ஆயூஷ்மான், புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகள், வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும். பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தது வேறு எந்த மாநிலத்திற்கு இல்லாத பெருமையை தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் ₹36 லட்சத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. தேசிய அளவில் 9.2 கோடி பேருக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டி தரப்பட்டுள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் படுதோல்வி என கூற முடியாது. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஜூன் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை அந்ததந்த பகுதி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் டிபென்ஸ் காரிடர் மற்றும் 2 டேட்டா சென்டர் அமைய உள்ளது. தமிழை உலகளவில் எடுத்து சென்று பெருமை சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. ஒடிசா ரயில் விபத்தில் பணிகளை துரிதபடுத்தி 51 மணிநேரத்தில் மீண்டும் அப்பகுதியில் ரயில் இயக்கப்பட்டது.

தேர்தல் கூட்டணி பொறுத்தவரை மாநில தலைவர், தேசிய தலைமை முடிவு செய்யும். அயல்நாட்டில் ராகுல்காந்தி பேசியதை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார். அப்போது ஊடக பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், ராஜேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post 2047ல் இந்தியா வல்லரசாக மாற இலக்கு வைத்து ஒன்றிய அரசு செயல்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: