கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளி முற்றுகை

*கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரி, முதலியார்பேட்டை, மரப்பாலம் அருகே பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கோடை விடுமுறையிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் 14ம்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அரசின் இந்த உத்தரவை மீறி புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புக்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது குறித்த தகவல் கிடைக்கவே, பெற்றோர் மாணவர் சங்கத்தின் விசிசி நாகராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த பள்ளி முதல்வரிடம் அரசு கோடை வெயில் தாக்கம் கருதி விடுமுறை அளித்துள்ள நிலையில் தற்போது ஏன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்று சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு சார்பில் தங்களுக்கு எந்தவொரு உத்தரவும் வரவில்லை. எனவே வகுப்புகளை நடத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்குழுவினர் கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவிக்கவே, அவசரம், அவசரமாக பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே பெற்றோர் மாணவர் சங்கம் கொடுத்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்த புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி நிர்வாகத்திடம் இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்தார். அப்போது தங்களுக்கு கல்வித்துறையிலிருந்து முறையான உத்தரவு வராததால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வகுப்புகளை மட்டும் இயக்கியதாக கூறினர். அவர்களை எச்சரித்த அதிகாரி, அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளி முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: