நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் பாவூர்சத்திரம் அருகே பழமையான அம்மன் கோயில், ஆலமரம் அகற்றம்

*பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

பாவூர்சத்திரம் : நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிக்காக பாவூர்சத்திரம் அருகே பழமையான அம்மன் கோயில் சிலை போலீசார் பாதுகாப்புடன் எடுத்து, வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து பழமையான ஆலமரமும் வெட்டி அகற்றப்பட்டது. நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இச்சாலைப்பணிக்காக சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலை அமைக்கப்பட்ட நிலையில், சாலை விரிவாக்கப் பணிக்காக பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் பழமையான மூனால் என்ற முப்புடாதி அம்மன் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றவும், கோயில் அருகில் அமைந்துள்ள பழமையான ஆலமரத்தை அப்புறப்படுத்தவும் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், அங்கு வந்த ஒரு பெண், ஒரு ஆண் திடீரென சாமி ஆடினர். அப்போது அம்மன் இந்த இடத்தில் தான் இருக்கிறாள். வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என கூறியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம், ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்னபாஸ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், மாலினி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பிறகு போலீசார் பாதுகாப்புடன் அம்மன் சிலை அங்கிருந்து எடுத்து, வேறு இடத்தில் மாற்றி வைத்தனர். தொடர்ந்து பழமையான ஆலமரமும் இயந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டது. இந்த சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் பாவூர்சத்திரம் அருகே பழமையான அம்மன் கோயில், ஆலமரம் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: