பவானி அரசு சித்த மருத்துவமனையில் நீராவிக்குளியல், சிரசு எண்ணெய்,வர்மக்கலை சிகிச்சை பெற ஆர்வம்

*பொதுமக்களிடம் குவியும் பாராட்டு

பவானி : பவானி அரசு சித்த மருத்துவமனையில் தோல் நோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறப்பு சிகிச்சை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு, சேலம், கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து பாராட்டும், வரவேற்பும் குவிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம், பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவில் தோல் நோய்களான கரப்பான், சொரியாசிஸ் பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, அளிக்கப்படும் மூலிகை நீராவிக்குளியல் சிகிச்சையால் நோயாளிகளுக்கு உடல் எடை குறைதல், தோல் நோய்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் குணமாகிறது.
குறிப்பாக, பக்கவாத பாதிப்பால் கை, கால்கள் செயலிழப்பு, முக வாதம், இடுப்பு எலும்பு தேய்மானம், முழங்கால் வலி, கழுத்து எழும்பு தேய்மானம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற ஆர்வம் காட்டுகின்றனர். முன்னதாக, மூலிகை எண்ணெய் கொண்டு மசாஜ் எனப்படும் தொக்கணம் செய்யப்படுகிறது. மேலும், புற வளையம், வர்மக்கலை, அகச்சிவப்பு ஒளி சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதவிர, பக்கவாதம், ஒற்றை தலைவலி, முகவாதம், மன நோயாளிகள், மன அழுத்தம், தூக்கமின்மை, சைனசைட்டீஸ் (சைனஸ்) நோய் பாதிப்புகளுக்கு சிரசு எண்ணெய் (தாரா சிகிச்சை முறை) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் வாரத்தில் 2 நாட்கள் (செவ்வாய், சனிக்கிழமை) தியானம் மற்றும் ஆசன பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இங்கு, கொரோனா பரவல் காலத்துக்கு பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர் உட்பட பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சித்த மருத்துவ சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகள், இங்கு இலவசமாக கிடைக்கிறது.

இதுகுறித்து, சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி கூறுகையில், ‘‘பவானி அரசு சித்த மருத்துவ பிரிவில் அதிகளவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 5 ஆயிரம் சதுர அடியில் 100-க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் தோட்டம் அமைக்கப்பட்டு, நோயாளிகளின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைக்கப்பட்டுள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டுக்கு தமிழக அளவில் பவானி அரசு சித்த மருத்துவ பிரிவு இரண்டாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் இங்கு செயல்படும் சித்த மருத்துவ பிரிவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு, ஆண்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இங்கு, சேலம், கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தும், உள்ளூர் மக்கள் இடையேயும் பாராட்டும், வரவேற்பும் அதிகளவில் குவிந்து வருகிறது.

The post பவானி அரசு சித்த மருத்துவமனையில் நீராவிக்குளியல், சிரசு எண்ணெய்,வர்மக்கலை சிகிச்சை பெற ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: