நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு-கலெக்டர் தகவல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் ரிவித்துள்ளார்.காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படவுள்ளது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். உயர் விளைச்சல் தரும் குறுகிய கால ரகங்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் பெற வேண்டும்.

குறைந்த வயதுடைய ஆடுதுறை 53, அம்பை 16, கோ 51 போன்ற குறுகிய கால விதை நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதை கிராம திட்டத்தின் மூலம் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது. எனவே தற்போதுள்ள நீரைக்கொண்டு, குறுகிய கால ரகங்களை பயன்படுத்தலாம். இயந்திரங்களை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூலை பெற வேளாண்மை துறையின் ஆலோசனை பெற்று சாகுபடி செய்ய வேண்டும். இயல்பாக 4 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். வரும் 12ம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபடவுள்ளதால் நடப்பாண்டில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு வசம் போதுமான அளவு உரங்கள் கையிருப்பு உள்ளது. மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குறுவையில் மாற்று பயிர் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. குறுவையில் மாற்றுப்பயிராக சிறுதானியம் கேழ்வரகு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள் மற்றும் இடுப்பொருட்களுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.1150 வழங்கப்படும்.

குறுவையில் மாற்றுப்பயிராக பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள் மற்றும் இடுப்பொருட்களுக்கு 50 சதவீத மானியமாக ரூ.1740 வழங்கப்படும். குறுவையில் மாற்றுப்பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளுக்கு 50 சதவீத மானியமாக ரூ.4 ஆயிரத்து 700 வழங்கப்படும். விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி குறுவையில் மாற்றுப்பயிராக சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: