வட்டவிளை ஆரம்பசுகாதார நிலையம் தேசியதரச்சான்று பெற்ற நிலையில் வடசேரி ஆரம்பசுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழு ஆய்வு

நாகர்கோவில் : வடசேரி நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் தேசிய தரஉறுதி தரநிலையம்(என்கியூஏஎஸ்) அதிகாரிகள் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தினர். ஆரம்பசுகாதார நிலையங்களில் உள்ள கட்டமைப்புகள், அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், ஆவணங்கள் பராமரிப்பு உள்பட பல வசதிகள் எப்படி உள்ளது என தேசிய தரஉறுதி தரநிலையம்(என்கியூஏஎஸ்) அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து வசதிகளும் உடைய ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு தேசியதரச்சான்று வழங்குவார்கள்.

அதன் அடிப்படையில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் தேசிய தரஉறுதி தரநிலையம் அதிகாரிகள் டாக்டர்கள் இந்திரா, அசோக்குமார் ஆகியோர் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் முடிவுகள் இன்னும் இரண்டு மாதத்தில் வழங்கப்படும். இந்த ஆய்வு குறித்து மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் கூறியதாவது: ஆரம்பசுகாதார நிலையங்களில் அனைத்து நோயாளிகளுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரம்பசுகாதார நிலையில்களில் முதலில் மாவட்ட அளவில் அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி சில கட்டமைப்புகள் செய்யப்படும். அதன்பிறகு மாநில அளவில் அதிகாரிகள் ஆய்வு செய்வர். அதில் அவர்கள் கொடுக்கும் பரிந்துரையின் பேரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். பின்பு ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்ற என்கியூஏஎஸ் அமைப்பு ஆரம்பசுகாதார நிலையங்களில் ஆய்வு செய்வர். இதில் டாக்டர்கள், ஆய்வக பரிசோதனை நிலைய அதிகாரிகள், தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் இடம்பெற்று இருப்பர்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 5 நகர்புற ஆரம்பசுகாதார நிலையங்களில் வடசேரி நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் தேசிய தர உறுதி தரநிலையம் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் உட்கட்டமைப்பு வசதிகள் எப்படி உள்ளது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அங்குள்ள ஆவணங்களை எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பது, உள்பட 72 தரவுகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆய்வு செய்த 2 மாதத்தில் தேசிய தரச்சான்று கிடைக்கும். அப்போது ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் பரிசாக அந்த ஆரம்பசுகாதார நிலையத்திற்கு கிடைக்கும். அந்த பணத்தைக்கொண்டு தரச்சான்று பெற்ற வடசேரி நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் செலவு செய்யலாம். கடந்த ஜனவரி மாதம் வட்டவிளையில் உள்ள நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் என்கியூஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தற்போது அந்த நகர்புற ஆரம்பசுகாதார நிலையம் தேசிய தரச்சான்று பெற்றுள்ளது. இதனை தவிர கிருஷ்ணன்கோவில், தொல்லவிளை, வடிவீஸ்வரம் ஆகிய நகர்புற ஆரம்பசுகாதார நிலைய கட்டிடம் கட்டுமான பணி நடக்க இருப்பதால், இந்த நகர்புற ஆரம்பசுகாதார நிலையம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. கட்டுமானப்பணிகள் முடிந்தபிறகு தேசிய தரசான்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். என்றார்.

The post வட்டவிளை ஆரம்பசுகாதார நிலையம் தேசியதரச்சான்று பெற்ற நிலையில் வடசேரி ஆரம்பசுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: