பவானி-மேட்டூர் நெடுஞ்சாலை விரிவாக்கம் 9,500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன

*வெட்டும் மரங்களுக்கு பதிலாக ஈடு செய்ய திட்டம்

பவானி : ஈரோடு- பவானி-மேட்டூர்-தொப்பூர் வழித்தடத்தில் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளுக்கு சாலையோரத்தில் உள்ள 950 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதையடுத்து வெட்டப்படும் மரங்களை காட்டிலும் 10 மடங்கு அதாவது 9,500 மரங்கள் நடப்படும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

பவானி-மேட்டூர் ரோட்டில் இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலன் தரும் மரங்கள் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத காலகட்டத்தில் பொதுமக்கள் பயணத்துக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகளும், நடைவழிப் பயணமாக சென்ற காலம் முதல் இந்த ரோட்டின் வழிநெடுக ஏராளமான புளிய மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டது.

மேலும், ஆங்காங்கே நாவல் மரங்கள், விழுதுகள் தாங்கி நிற்கும் ஆல மரங்கள், அரச மரங்கள் மற்றும் பனை மரங்களும் உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகனங்கள் அதிகரிக்கவே பஸ், லாரி, வேன்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என போக்குவரத்துக்கு ஏற்ப சாலையை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் வரையில் 85 கிமீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இதனால் 7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ரோட்டில் தலா 1.50 மீட்டருக்கு தார் சாலையும், மண்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளது.

இதற்காக, வனத்துறையினரை கொண்டு மரங்கள் அளவீடு செய்யப்பட்டு, வெட்டி அகற்ற ஏலம் விடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பிளாட்டினம் மஹால் முதல் சின்னப்பள்ளம் வரையில் மேட்டூர் ரோட்டில் மொத்தம் 950 மரங்கள் வெட்டப்படுகின்றன. தற்போது பிளாட்டினம் மஹால், கோனேரிப்பட்டி பிரிவு, ஆனந்தம்பாளையம் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு, இயந்திரங்களை கொண்டு வெட்டி துண்டுகளாக்கி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

இப்பாதையில் பயணித்தோருக்கு காலம் காலமாக நிழலும், பலனும் தந்த மிக பழமையான புளிய மரங்கள், நாவல் மரங்கள் வெட்டப்பட்டு, வேர் மட்டும் அனாதையாக கிடப்பது காண்போரைக் கலங்க வைக்கிறது. தற்போது புளிய மரங்கள் இலையுதிர் காலத்தில் இருந்து வசந்த காலத்தில் பயணிக்கும் இவ்வேளையில் பூக்கள் பிடித்து பசுமையுடன் காட்சியளிக்கிறது. இம்மரங்களுக்கு மத்தியில் இரு சக்கர வாகனத்தில் களைப்பின்றி நிழலில் பயணிக்கும் இச்சாலையில், எதிர்காலத்தில் மரங்கள் வெட்டப்பட்டு பொட்டல் வெளியாக காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு-சின்னப்பள்ளம் சாலையில் வெட்டப்படும் 950 மரங்களுக்கு ஈடாக ஒரு மரத்துக்கு 10 மரங்கள் வீதம் வனத்துறை மூலம் நட்டு வளர்க்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக, சத்தியமங்கலம் அருகே நல்லூர் மற்றும் தேசிபாளையம் ஊராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் அடையாளம் காணப்பட்டு, வனத்துறை மூலம் மரங்கள் நட்டு வளர்க்க ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம், வெட்டப்படும் மரங்களை காட்டிலும் 10 மடங்கு, அதாவது 9500 மரங்கள் நட்டு வளர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பவானி-மேட்டூர் நெடுஞ்சாலை விரிவாக்கம் 9,500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன appeared first on Dinakaran.

Related Stories: