சாத்தான்குளம் பகுதியில் சூறாவளி காற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம்

*தாசில்தார் பார்வையிட்டார்

சாத்தான்குளம் : சாத்தான்குளம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கை மரங்களும், தென்னை மற்றும் வாழைக்களும் சேதமடைந்தன. இதனை தாசில்தார் ரதிகலா பார்வையிட்டார். சாத்தான்குளம் தென்பகுதியில் முருங்கை விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இந்த முருங்கையை விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலமும், வங்கிகளில் கடன் பெற்றும் கவனித்து வருகின்றனர். முருங்கைகள் தற்போது பூப் பூத்து சிறிய அளவிலான காய்கள் காய்த்தும் காணப்படுகிறது. முருங்கைகள் காய்க்கும் காலம் 6 மாதம் என்பதால் விவசாயிகள் முழுமூச்சோடு ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் சாத்தான்குளம் சுப்பராயபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருங்கை மரங்களும், பன்னம்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழைகளும் சேதமடைந்தன.
சூறைக்காற்றில் சேதமடைந்த முருங்கை மற்றும் வாழை, தென்னைகளை சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், வாழ்வாதாரமாக முருங்கை மரம் விளங்கி வருகிறது.

அது காய்க்கும் தருவாயில் தற்போது சூறாவளி காற்றில் சேதம் அடைந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடன் வாங்கி பயிரிடப்பட்ட முருங்கை சேதமடைந்துள்ளதால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம். எனவே எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தாசில்தார், உரிய கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

பின்னர் அவர், பன்னம்பாறை கிராமத்தில் சேதமான தென்னை, வாழைகளை பார்வையிட்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமலிங்கம், சுந்தரபாண்டி, தலையாரிகள் வள்ளி துரைசிங்கம், வேளாண்மை உதவி அலுவலர்கள் முனீஸ்வரி, அஜித்குமார் மற்றும் விவசாயிகள் லூர்துமணி, ராமச்சந்திரன், ஸ்டான்லி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.
சூறைக்காற்று பாதிப்பு குறித்து விவசாயிகள் கூறுகையில், சாத்தான்குளம் தென் பகுதியில் முருங்கை விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. இதனால் பல விவசாயிகள் வாழ்வு பெற்று வருகின்றனர். கடன் வாங்கியும், தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் சூறாவளி காற்றால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், எங்களது நிலைமை உணர்ந்து சேதமான முருங்கை பயிருக்கு உரிய நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மெஞ்ஞானபுரத்திலும் வாழை, முருங்கை நாசம்

மெஞ்ஞானபுரம் பகுதியிலும் நேற்று முன்தினம் மாலையில் இடி,‌ மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறைக்காற்றில் அடைக்கலாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பிள்ளைவிளை, கல்விளை பகுதியில் உள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை, முருங்கை பயிர்கள் அடியோடு முறிந்து சேதமடைந்தன. இதேபோல் பல விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்ட வாழைகள் முறிந்து பாழானது. எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாத்தான்குளம் பகுதியில் சூறாவளி காற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: