திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் புகுந்து சிக்னல் பெட்டியை உடைக்க முயன்ற வாலிபர்

*சதி வேலையா? என போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பெட்டியை உடைக்க முயன்ற வாலிபரை கைது ெசய்த ரயில்வே போலீசார், சதி வேலை செய்ய திட்டமிட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்குவதற்கான சிக்னல்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்குள்ள ரயில்வே சிக்னலில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனை ரயில் நிலையத்தில் உள்ள கணினியில் கண்டறியப்பட்டது.

உடனே ரயில் நிலைய மேலாளர், அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் அதிர்வு ஏற்பட்ட சிக்னல் அருகே சென்று பார்த்தனர். அப்போது, சிக்னல் விளக்கின் கீழே உள்ள பெட்டியை ஒரு வாலிபர் கல்லால் உடைப்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, திருப்பத்தூர் பீரான்லைன் பகுதியை சேர்ந்த கோகுல்(30) என்பதும், குடிபோதையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கோகுலை கைது செய்து திருப்பத்தூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். ரயில் சிக்னல் பெட்டியை உடைக்க முயன்றது குறித்து உரிய நேரத்தில் கண்டறிந்து சம்பந்தப்பட்டவரை கைது செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், ரயில்வே இருப்பு பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கைது செய்யப்பட்ட கோகுலிடம் ரயில் விபத்து ஏற்படுத்துவதற்கு நடத்தப்பட்ட சதியா? என தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பிடிபட்ட கோகுல் ‘சிக்னல் உடைப்புக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரயில்வே தண்டவாளத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன்’ என கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை கிரைம் மோப்ப நாய் ப்ரூஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்புத்துலக்கப்பட்டது. அங்கிருந்து சிறிது தூரம் சென்ற நாய் திடீரென நின்றுவிட்டது. யாரையும் கல்வி பிடிக்கவில்லை.

சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசாவில் ரயில்கள் விபத்துக்குள்ளானது, திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் டயர் வைத்து சதி தீட்டியது ஆகிய சம்பவங்களை தொடர்ந்து திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் உடைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் புகுந்து சிக்னல் பெட்டியை உடைக்க முயன்ற வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: