சேலம் அருகே பரிதாபம் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

சேலம் : சேலம் கொண்டலாம்பட்டி அருகே, மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள கல்பாரப்பட்டி மேல்காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (70), தறித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள்(60). இவர்களது மகள் பூங்கொடி (27). இவர்கள் 3 பேரும், டூவீலரில் நேற்று காலை மலங்காடு பகுதியில் உள்ள மாரியம்மாளின் தாய் பார்வதியை பார்க்க சென்றனர்.

பின்னர், காலை 10.30 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டனர். சூளைமேடு பிரிவுரோட்டில் சாலையை கடக்க முயன்றனர். அந்த நேரம் அவ்வழியாக கோவையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கார், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் வெங்கடாஜலம், மாரியம்மாள், பூங்கொடி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் மாரியம்மாள், பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வெங்கடாசலம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தை பார்த்து, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், பலியான மாரியம்மாள், பூங்கொடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடாஜலத்தை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார். இதை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல்லைச் சேர்ந்த ராகுல்(32) என்பவரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் அரசு போட்டி தேர்வுக்கான கோச்சிங் சென்டர் நடத்தி வரும் ராகுல், சேலத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருமணமாகி 3 மாதமே ஆகிறது

விபத்தில் உயிரிழந்த பூங்கொடிக்கு, கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், பாட்டியை பார்ப்பதற்காக சென்ற போது, பெற்றோருடன் விபத்தில் சிக்கி பலியானது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தறித்தொழில் செய்து வரும் கிருஷ்ணன், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். வெங்கடாசலத்தின் மற்றொரு மகளான அமுதா(20), கல்லூரியில் படித்து வருகிறார். கார் மோதி கணவன், மனைவி, மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் அருகே பரிதாபம் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: