திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் மது பழக்கத்தால் பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் * 24 படுக்கை வசதிகள் அமைப்பு * கலெக்டர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை, ஜூன் 7: திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், மது போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், மது போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் மருத்துவத்துறை ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், மது போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறு வாழ்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மது பழக்கத்தால் பாதித்தவர்களை, இந்த மையத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வசதியாக 24 படுக்கைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மன நல மருத்துவர்களின் நேரடி மேற்பார்வையில், இந்த மையம் செயல்பட உள்ளது. மது பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் குடி நோயாளிகளாக மாறிவிட்டவர்களை அதில் இருந்து மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்காக, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை, இந்த மையத்துக்கான சிறப்பு மருத்துவர்களாக நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தை, கலெக்டர் முருகேஷ் நேற்று நேரில் பார்வையிட்டார். மது பழக்கத்தில் சிக்கியவர்களை மீட்டு, அதிலிருந்து விடுபட வைக்க தேவையான முயற்சிகளை இந்த மையத்தின் மூலம் மேற்கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கேட்டறிந்தார். மேலும், தேவையின் அடிப்படையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது, எஸ்பி கார்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்தன், கண்காணிப்பாளர் டாக்டர் அரவிந்த், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பாபுஜீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் மது பழக்கத்தால் பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் * 24 படுக்கை வசதிகள் அமைப்பு * கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: