மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்கள் பங்கேற்பு: பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் பேட்டி

சென்னை: மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த 9 ஆண்டுகளில் வீடு வாங்குபவர்களுக்கு, கட்டுபவர்களுக்கு மானியம், முத்ரா கடன் உதவி, தூய்மை இந்தியா திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனை, ஸ்மார்ட் சிட்டி திட்டம், குழாய் வழி குடிநீர் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு திட்டத்தினால், தமிழக மக்கள் அதிகம் பயன் அடைந்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்ல வேண்டியது எங்களது கடமை. தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்கிறார்கள். மாநில தலைவர் அண்ணாமலை 12 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் 9 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய நகரங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்கள் பங்கேற்பு: பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: