சேலம், ஜூன் 7: சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் தயாராகியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் நடப்பாண்டு கத்திரி வெயில் முடிந்த பின்னரும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் இருமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 12ம் தேதியன்று, 6 முதல் 12ம் வகுப்புகளுக்கும், அதனை தொடர்ந்து 14ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் தகுந்த மராமத்து பணிகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு பள்ளி திறக்கும் அன்றே இதனை விநியோகிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 1,487 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 23 உதவிபெறும் பள்ளிகளும், 288 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் படிக்கும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்ட அளவிலான விநியோக மையங்களில் பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணப்பொருட்கள் பெறப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெற்று ஆசிரியர்கள் மூலம் பாடவாரியாக அடுக்கி வைத்துள்ளனர். பள்ளி திறக்கும் அன்றே இவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 3 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் தயார் appeared first on Dinakaran.