ஜூன் 9 ல் நடக்கவிருந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவான விவசாய சங்கங்கள் போராட்டம் ரத்து

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் நடக்கவிருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ. எம்பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினர். அப்போது இந்த விவகாரத்தில் குற்றம் உறுதியாகும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததாக மல்யுத்த வீரர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரர் வீராங்கனைகள் தங்களது அரசு பணிகளில் மீண்டும் சேர்ந்து இருந்தனர். இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் முடித்துக் கொள்ளப்படுகிறது என வெளியான தகவலை அவர்கள் முழுமையாக மறுத்திருந்தார்கள். பணியில் சேர்ந்து இருந்தாலும் நீதி கோரிய தங்களது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்திருந்தனர்.

இது போன்ற சூழலில் மல்யுத்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல்வேறு விவசாய சங்கங்கள் களமிறங்கி இருந்தார்கள். குறிப்பாக டெல்லியில் இருந்து மல்யுத்த வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் ஜூன் 9ம் தேதிக்குள் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அன்றைய தினம் டெல்லியை முற்றுகையிடுவோம் என்றும், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், விவசாய சங்கங்களின் தலைவர் ராகேஷ் திகைத் அளித்துள்ள உறுதியில்,‘‘ஒன்றிய அரசுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தாங்கள் ஜூன் 9ம் தேதி நடத்தவிருந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், வரும் நாட்களில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தேவையென்றால் பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என தெரிவித்துள்ளார்.

The post ஜூன் 9 ல் நடக்கவிருந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவான விவசாய சங்கங்கள் போராட்டம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: