மேட்டூர் அணை 12ம் தேதி திறக்க உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: மேட்டூர் அணை வருகிற 12ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சேலத்தில் புதிதாக ரூ.1000 கோடியில் திட்டங்களை அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதிபெறும்.இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஜூன் 5ம் தேதி (நேற்று முன்தினம்) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், ஒடிசா ரயில் விபத்து காரணமாக கடைசி நேரத்தில் பயணம் ரத்தானது.

இதையடுத்து வருகிற 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இதற்காக ஜூன் 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். திருச்சியில் அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார். 10ம் தேதி மீண்டும் சென்னை திரும்பும் முதல்வர், 11ம் தேதி சேலம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்து வைக்கிறார். 3வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது.

The post மேட்டூர் அணை 12ம் தேதி திறக்க உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: