தடை காலம் முடிய 9 நாட்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகளை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரம்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் முடிய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி வலைகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக கடலில் மீன்வளப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்.14ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இதனால் வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை, பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டது.

இந்த விசைப்படகுகளை ரூ.பல லட்சம் செலவில் பழுது நீக்கி பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உட்பட தமிழக கரையோரத்தில் பெரும்பாலான படகுகள் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், கடலுக்கு செல்வதற்கு தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. தடை காலம் முடிய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் படகுகளை கடலுக்கு மீன்பிடிக்க அனுப்புவதற்கான ஆயத்த பணிகளில் படகு உரிமையாளர்களும், மீனவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி வலைகளை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் 14ம் தேதி நிறைவு
மீன்பிடித் தடைகாலம் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அன்று முதல் பாக் ஜலசந்தி கடலில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும். மன்னார் வளைகுடாவில் ஜூன் 15ம் தேதி முதல் படகுகள் கடலுக்கு செல்லும். மீன்பிடித் தடை அமலானதால் இடைப்பட்ட 60 நாட்கள் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதனால், மீனவரத்து வழக்கத்தை விட பன்மடங்கு குறைந்தது. நாட்டுப் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் உள்ளூர் மார்க்கெட்டுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் மீன்களின் விலையும் வழக்கத்தைவிட ரூ 100 முதல் 250 வரை அதிகமாக இருந்தது. இரண்டு மாத கால மீன்பிடித்தடையினால் வேலை இழந்த மீனவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கு மீன்பிடி கூலி வேலைக்கு சென்றனர். பலர் கட்டுமான வேலை உள்ளிட்ட பலதரப்பட்ட தொழிலுக்கு அன்றாட கூலிகளாக சென்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் இறால், கடல் நண்டு, கனவாய் மீன் உள்ளிட்ட பலவகை மீன்களின் ஏற்றுமதி முற்றிலும் நின்று போனதால் ரூ.பல ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், உள்நாட்டு மீன் வர்த்தகமும் முடங்கியது. தமிழக கடலில் அமலில் உள்ள இரண்டு மாத மீன்பிடித் தடைகாலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடியும் நிலையில் கேரளா உள்ளிட்ட அரேபியன் கடல் பகுதியில் ஜூன் 1 முதல் அறுபது நாள் தடைக் காலம் துவங்கியது.

The post தடை காலம் முடிய 9 நாட்கள் உள்ள நிலையில் மீன்பிடி வலைகளை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: