அட்டகாச சுவையில் அயனாவரம் உணவகம்

பொடி இட்லி ப்ரை, தக்காளி தட்டு இட்லி…

வீட்டில் தயார் செய்த சைவ உணவுகளை சைக்கிளில் எடுத்து சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார் தந்தை. அந்த உணவின் ருசியும், தரமும் அவரை கேட்ரிங் தொழிலில் கோலோச்ச வைத்ததோடு, சொந்தமாக மெஸ் துவங்கி சாதிக்க வைத்திருக்கிறது. வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கிய அவரது மகன், அந்த வேலையை உதறிவிட்டு தந்தை துவங்கிய மெஸ்சை, மேலும் விரிவுபடுத்தி சைவ உணவுகளில் சில அப்டேட்களைக் கொடுத்து சபாஷ் போட வைத்திருக்கிறார். சென்னை அயனாவரத்தில் உள்ள ராகவேந்திரா மெஸ்சின் குட்டி ஸ்டோரிதான் இது. நன்றாக இருக்கிறதே என மேலும் சில தகவல்களை கேட்டோம்.

ராகவேந்திரா மெஸ் குறித்து படபடவென்று பேச ஆரம்பித்தார் அதன் உரிமையாளரான ஜெய்சங்கர்…அயனாவரம்தான் எங்களுக்கு பூர்வீகம். பிறகு காஞ்சிபுரத்தில் எம்.எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி படித்தேன். சென்னையில் ஒரு தனியார் ஐ.டி கம்பெனியில் 6 வருடங்களுக்கு மேலாக மென்பொறியியல் துறையில் பணிபுரிந்தேன். இதில் கிடைத்த அனுபவத்தை வைத்து துபாயில் கடந்த 2018ம் ஆண்டு வரை வேலை செய்தேன். அப்பா சந்திரமெளலி 1990ல் இருந்து கம்பெனிகள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு கேட்ரிங் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அம்மா உமாமகேஸ்வரி உதவியாக இருந்தார்.

அனைத்து உணவிற்கும் தேவையான மசாலாவை வீட்டிலேயே தயார் செய்வார். இந்நிலையில் அப்பாவின் நண்பர் ஈஸ்வரன் என்பவரின் அறிவுரையின்படி எங்கள் வீட்டிலேயே அம்மா தயார் செய்த உணவினை அடுக்கு டிபன் பாக்சில் வைத்து அப்பா சைக்கிளில் சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார். உணவின் ருசிக்காக நிறைய பேர் எங்களை அணுகி திருமணத்தில் உணவு தயார் செய்து கொடுக்க சொல்வார்கள். அதையும் செய்யத்தொடங்கினோம். இப்படியே நாங்கள் படிப்படியாக வளர்ந்துகொண்டிருந்த நிலையில், 2018ம் ஆண்டு அயனாவரத்தில் ராகவேந்திரா பெயரிர் மெஸ் துவங்கினார் அப்பா.

அப்போது துபாயில் வேலை செய்துகொண்டிருந்த நான், வேலையை விட்டுவிட்டு உணவகத்தை கவனிப்பதற்காக வந்துவிட்டேன். சென்னையில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் உணவினை தயார் செய்து நாங்களே வழங்கத் தொடங்கினோம். ஆரம்பத்தில் குறைந்த டிஷ்கள் வழங்கி வந்தாலும், தற்போது 140க்கும் அதிகமான டிஷ்களைக் கொடுத்து வருகிறோம். அனைத்து உணவுகளுமே அம்மா தயார் செய்து கொடுக்கும் மசாலாவைக்கொண்டுதான் சமைக்கப்படுகிறது. அதனால் வீட்டின் சுவையிலேயே உணவுகள் இருக்கும்.

எங்கள் உணவகத்தில் பொடி இட்லி ப்ரை, தக்காளி தட்டு இட்லி, காயின் பரோட்டா, சில்லி பரோட்டா மஸ்ரூம் ஆகியவற்றை எப்போதுமே ஸ்பெஷல். பொடி இட்லி மிகவும் சிறியதாகத்தான் இருக்கும். பொடி இட்லியை வாழை இலை போட்ட தட்டில் வைத்து இரண்டு கரண்டி நெய்யை ஊற்றி, அதன் மேல் மிளகாய் பொடியும், இட்லி பொடியும் கலந்த ஒரு பொடியை தூவி, அதனோடு கொஞ்சம் கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னியும் கலந்து கொடுப்போம். இதைப்பார்க்கும்போதே எச்சில் ஊறும். இதுபோல சிறிய இட்லி கொடுப்பதற்கான காரணம் என்ன என்பது ஒரு சிறிய ரகசியம்தான். அதாவது சிறிய இட்லித்துண்டை எடுத்து கரண்டி அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதற்கும், பெரிய இட்லித்துண்டை எடுத்து ஸ்பூன் அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதுதான் வித்தியாசம்.

இப்போது கிடைக்கும் நெய் எல்லாம் ரெடிமேட் நெய்தான். வீட்டில் அம்மா வெண்ணையை உருக்கி காய்ச்சுவார். அப்போது வீடே வெண்ணை வாசத்தில் மிதக்கும். அது உருகி நெய் பதத்திற்கு வரும்போது முருங்கைக்கீரையை கிள்ளி உள்ளே போடுவார். இப்போது அந்தக் கீரை கொஞ்சம் கொஞ்சமாக பொசுங்கி நெய்யோடு சேர்ந்து வரும் வாசமே நம்மை சாப்பிடத்தூண்டும். அப்படி தயார் செய்த நெய்யை மட்டும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு இட்லியுடன் சேர்த்து வழங்கி வருகிறோம். அதேபோல் வாழை இலை வெஜ் பரோட்டாவும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

அனைத்து வகையான வெஜ் டிஷ்களும் ராகவேந்திரா உணவகத்தில் கிடைப்பதால் உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து சாப்பிடுகிறார்கள். தற்போது மூன்று வேளை உணவும் இங்கு கிடைக்கிறது. மதியத்தில் மினி மீல்ஸ் ரூ.80க்கும், ஃபுல் மீல்ஸ் ரூ.130க்கும் வழங்குகிறோம். வீட்டு செய்முறையில் நாங்கள் உணவை மட்டும் வழங்குவது இல்லை. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களையும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் போலவே பார்த்து உணவினை பறிமாறுகிறோம்.

வருபவர்களுக்கு என்ன உணவு வேண்டும் என்பதை கேட்டு வழங்குகிறோம். வாடிக்கையாளர்களிடம் நாங்கள் சில கோரிக்கைகளையும் வைப்பது உண்டு. அது உணவினை வீண் செய்யாதீர்கள் என்பது மட்டும்தான். நெல், காய்கறியை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். உணவு கிடைக்காமல் பலர் பசியாக கிடக்கிறார்கள். இந்த நிலையில் உணவை நாம் வீணாக்குவது சரியான முறையல்ல. எங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க நான் இரண்டு விஷயங்களைப் பின்பற்றுகிறேன்.

உணவுக்காக என்னிடம் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் மதிக்கிறேன். நாங்கள் செய்யும் உணவு அவர்களின் விருப்பத்திற்கேற்ப இருப்பதை ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் உறுதி செய்கிறேன். இந்த அடிப்படை விதிகளை நாங்கள் பின்பற்றும்போது, வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி தொடர்ந்து வருவார்கள்’’ நம்பிக்கை பொங்க பேசுகிறார் ஜெய்சங்கர்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மஷ்ரூம் கொத்து பரோட்டா

தேவையானவை

பரோட்டா – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
வேகவைத்த மஷ்ரூம் – 1 கப்
பச்சை மிளகாய் – 1
கடுகு – ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வெஜ் சால்னா – தேவையான அளவு.

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். இப்போது அதில், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கலந்து அதில் வேகவைத்த மஷ்ரூமை போடவும். இவை எண்ணெயில் நன்கு கலந்ததும் உப்பு, மிளகு தூள், உதிர்த்து வைத்திருக்கும் பரோட்டா சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக இதன் மேல் வெஜ் சால்னா ஊற்றி நன்கு வதக்கி, கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான மஷ்ரூம் கொத்து பரோட்டா ரெடி.

The post அட்டகாச சுவையில் அயனாவரம் உணவகம் appeared first on Dinakaran.

Related Stories: