காதுகள் ஏன் கேள்விக்குறிபோல இருக்கின்றன?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எது பெரிய செல்வம்? என்ற ஒரு கேள்வி திருவள்ளுவரிடம் கேட்கப்பட்டது. அவர் நிறைய யோசித்தார். கல்வியைச் செல்வமாகச் சொல்லலாமா? கண் பார்வையைச் செல்வமாகச் சொல்லலாமா? இல்லறத்தைச் செல்வமாகச் சொல்லலாமா? இனிய பிள்ளைகளைச் செல்வமாகச் சொல்லலாமா? உறவைச் செல்வமாகச் சொல்லலாமா? நட்பைச் செல்வமாகச் சொல்லலாமா? நடத்தையைச் செல்வமாகச் சொல்லலாமா? குணத்தைச் செல்வமாகச் சொல்லலாமா? பொறுமையைச் செல்வமாகச் சொல்லலாமா? திறமையைச் செல்வமாகச் சொல்லலாமா? இப்படி அவருடைய சிந்தனை ஓடுகிறது. இவைகள் எல்லாம் நிச்சயமாகச் செல்வங்கள்தான். ஆனால், எது தலையாய செல்வம்? என்கிற கேள்வி எழுகிறது அல்லவா. அதற்கு விடை காண வேண்டும் அல்லவா … அதற்கு நிறைவான ஒரு விடையை திருவள்ளுவர் ஒரு குறட்பாவில் சொல்லுகின்றார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். கேட்பதுதான் சிறந்தது. ஒன்பது பக்தியில் ச்ரவணம் என்கின்ற கேள்வியைத்தான் முதல் விஷயமாகச் சொன்னார்கள். சுகர், பரிஷீத் மகாராஜாவுக்கு பாகவதம் சொன்னார். ஏழு நாட்கள் சொன்னார் சுக பிரம்மம். சாவின் நாளை அறிந்த பரிஷீத் மகாராஜா, அந்த அச்சமோ, உணர்வோ இன்றிக் கேட்டான். அவனுக்கு உணவோ, தூக்கமோ தேவைப்படவில்லை.

உன்னிப்பாகக் கேட்டான். கடைசியில் சுக பிரம்மம் கேட்டார். “இந்த பாகவதத்தின் மூலம் என்ன தெரிந்து கொண்டாய்? என்ன உணர்ச்சி பெற்றாய்?”

“எத்தனைப் பிறவிகள் பெற்றாலும், எத்தனை யுகங்கள் தவம் செய்தாலும் கிடைக் காத பேற்றைப் பெற்றேன். நீங்கள் ஸ்ரீபாகவதத்தை, இனிமையாய், அமுதமாய்ச் சொன்னதைக் காதால் கேட்டேனே, அதுவே பெரும்பேறு” என்றான். பகவான் நம் இருதயத்தில் நுழைகிறான். மனதில் இறைவன் உறையும் இடத்தினை தஹராகாஸம் என்று உபநிடதங்கள் சொல்லுகின்றன.

உள்ளமோ பெருங்கோயில்
ஊன் உடம்பு ஆலயம்

– என்று திருமூலர் பாடுகின்றார்.

அப்படியானால் மற்ற கோயில்கள் எல்லாம் என்ன? என்ற ஒரு கேள்வி எழும். அவைகள் எல்லாம் இளம் கோயில்கள். பாலாலயம் செய்யப்பட்ட கோயில்கள். அந்த பாலாலயத்தில் இருந்து நம்முடைய இருதய விலாசத்திற்கு எம்பெருமான் வர வேண்டும். அப்படி வருவதற்கு எது வாசல் என்ற ஒரு கேள்வி வருகிறது அல்லவா! அவன் கண் வழியாக வருகின்றானா? வாய் வழியாக உள்ளே நுழைகின்றானா? எப்படி உள்ளே நுழைகிறான்? இதற்கு விடை சொல்கிறார் நம்மாழ்வார்.

பகவான் காதின் வழியே தான் உள்ளே நுழைகிறார் என்பதற்கு “புவியும் இரு விசும்பும்” என்ற பாட்டு சான்று.
புவியும் இருவிசும்பும் நின்அகத்த, நீ என்-
செவியின் வழிபுகுந்து என் உள்ளாய், – அவிவுஇன்றி –
யான்பெரியன் நீபெரியை என்பதனை யார்அறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
கேட்பது மிகச் சிறந்த விஷயம்.

பகவானே பீஷ்மர் சொல்ல விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்டான். ராமன், தன் கதையான இராமாயணத்தை லவ குசர்கள் பாடிக் கேட்டான்.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால்
கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே

– என்பது குலசேகர ஆழ்வார் பாசுரம்.

இராமாயணம் கேட்டால் அமுதத்தைக் கூட மதிக்க மாட்டார்களாம்.
அமுதம் பருகுவது. (Drink by mouth)
இராமாயணம் கேட்பது. (hearing by ear)உண்பதை விட,
கேட்பது சிறந்தது என்பதால் ராமனே சிரவணம் செய்தான். (கேட்டான்).
செவியிற் சுவையுணரா வாயுணர்வின்
மாக்கள்
அவியினும் வாழினும் என்.

அதனால்தான் பெருமாளுக்குரிய நட்ஷத்திரம் திருவோணம் “சிரவணம்’ என்று சொல்லப்படுகிறது. அன்று பகவான் பெருமைகளைக் கேட்க வேண்டும்.

குழந்தை முதலில் கருவில் தோன்றியவுடன் வெளியில் இருந்து பேசுகின்ற சத்தத்தை கேட்குமாம். அப்படித்தான் பிரகலாதன் கேட்டான். அபிமன்யு கேட்டான். அதனால் தான் ஆறாவது மாதத்தில் சீமந்தம் நடத்துகின்றார்கள்.வாய்,கண், மூக்கு எல்லாவற்றையும் அப்படி அப்படியேஅமைத்த, இறைவன் செவிக்கு மட்டும் ஒரு கதவு போல் வைத்தான். அதற்கு பூ வைப்பார்கள். கர்ணபூஷணம் வைப்பார்கள்.

ஞானசம்பந்தர் இறைவனை வர்ணிக்கின்றபொழுது தோடுடைய செவியன் என்று அவருடைய செவியைத்தான் வருணிக்கின்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே

கற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்வித்திறம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். கற்பதிலேயே சிறந்தது கேட்பதுதான். அப்படிக் கேட்கும் திறன் இருந்தால் அதுவே அவர்களுக்கு மிகச்சிறந்த கல்வியறிவைத் தரும்.

மாணவர்கள் கேள்விகளைக் கேட்டு கற்றுக்கொள்கிறார்கள். புதியவர்கள் கேள்விகளைக் கேட்டு கற்றுக்கொள்கிறார்கள். கண்டுபிடிப்பாளர்கள் கேள்விகளைக் கேட்பதன் மூலம் வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்கிறார்கள். இது எளிய மற்றும் மிகவும் பயனுள்ள கற்றல் வழியாகும்.

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

நல்ல விஷயங்களைக் கேட்கின்ற காதுகள் தான் கேட்கும் காதுகள். நல்ல விஷயங்களைக் கேட்காமல் இருந்தால்,அது செவித்திறன் பெற்ற காதுகளாக இருந்தாலும், கேட்காத காதுகள் தான் (Deaf) என்கிறார் வள்ளுவர்.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வி ஞானத்தில் சிறந்த அறிஞர்கள் பாடகர்கள் உண்டு. பார்வையை விட கூர்மையானது செவித்திறன். அது மனதின் உள்ளே (அந்தராத்மா- அசரீரி) இருந்து வருகின்ற சத்தத்தையும் கேட்கும்.கேள்+வி=கேள்வி. கேட்டல் என்ற பொருளைத் தரும் – வி என்ற தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர்.ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை! உலகில் பல வளர்ச்சிகள் கண்டுபிடிப்புகள் உண்டாவதற்கு காரணமிந்த கேள்விதான்.மனிதனின் ஆர்வத்தைத் தூண்டிவிடுவது கேள்வி. புத்தியுள்ள மனிதர்களைத் தூண்டிவிட்டு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானது இந்த கேள்விதான்.

கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தாது இன்று – என பாடல் ஒன்று இருக்கிறது. கேள்வி கேட்பது வாழ்க்கையின் முக்கியமான ஒரு தூண்டுகோலாகும். ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் மேலும் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கும் கேள்விகள் சிறந்த வழியாகும்.

உபநிடதங்கள் தோன்றுவதற்கும் காரணம் கேள்விதான்.‘‘கோ குணவான்?” என்ற கேள்விக்கு விடைதான் இராமாயணமாக விரிந்தது.‘‘நான் யார் (Who I am?) என்ற கேள்விதான், விருதுநகருக்கு பக்கத்திலே திருச்சுழி என்ற கிராமத்தில் பிறந்த, வேங்கடராமனை, திருவண்ணாமலைக்கு அனுப்பி ரமண மகரிஷி ஆக்கியது.வேதம் என்பது காதால் கேட்பது. அதனால் அதற்கு ஸ்ருதி என்று பெயர். எழுதாக்கிளவி என்று வேதத்தை சொல்லுவார்கள். அது காதில் கேட்டு மனதில் நிறுத்த வேண்டும். அப்படியானால் வேதம் என்பது காதுகளோடு தொடர்புடையது என்பது தெரிகிறது.வேதத்தைக் கிரகிக்கும் காதுகள் உயர்வானதுதானே.

கிள்’ – என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல்தான் கேள்(கேள்வி).

கிள் – கேள். கிள் – என்ற அடிச்சொல் கிண்டுதல், தோண்டுதல் பொருள் குறித்தது.
கிண்டிக் கிளறுதல் = ஆழத்தில் மறைந்திருப்பதை தோண்டி வெளிக் கொணர்தல்.
விடைகளை வேண்டிக் கிண்டுதலால் கேள்வி எனப் பெயர் பெற்றது.

இன்றைக்கும் கிண்டிக் கிளறி கேட்பது, தோண்டித் துருவி கேள்வியால் துளைத்து. போன்ற பேச்சு வழக்கு வாக்கியங்களைக் காணலாம்.

கேட்டல் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு.

1. கவனித்தல். (listen)
2. கேட்டல்(ask).
கவனித்து, எவன் கேள்வி கேட்கிறானோ, அவன் முன்னேறலாம். ‘‘சிறந்த விஷயத்தை கேள். யார் சொல்கிறார் என்று பார்க்காதே. என்ன சொல்கிறார் என்று கேள்’’ என்பார்கள் பெரியவர்கள். அப்படித்தான் மகான்கள் கேட்டார்கள்.ஒரு வழிப்போக்கன் திருப்பதிக்கு, இதுதான் வழி சொல்லியதைக் கேட்டு, தனக்குத் தெரியாத வழியைச் சொன்னானே என்று அவனைக் கொண்டாடினார் ராமானுஜர்.

எங்கோ யாரோ சொல்லிய வார்த்தை மகான்களை ஞானம் பெற வைத்தது. “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன்தான் திருவெண்காடர் பட்டினத்தார் ஆனார்.யார் சொல்கிறார் என்று கவனிப்பவர்கள் சாதாரண மனிதர்கள்.

எதைச் சொல்கிறார்கள் என்பதை கவனிப்பவர்கள் சிறந்த மனிதர்கள். பல நல்ல விஷயங்கள் பிரபலமில்லாத சாதாரண மனிதர்களால் சொல்லப்படு வதனால் புறக்கணிக்கப்படுகின்றன. கூட்டத்தை ஈர்ப்பவரும், சன்மானத்தை அதிகம் பெறுபவனும், நல்ல விஷயத்தை சொல்கிறார் என்பது கிடையாது. உட்கார்ந்து கேட்கின்ற யாரோ ஒருவன் நல்ல விஷயத்தைச் சொல்பவனாக இருக்கலாம். ஆனால், அவன் உதாசீனப்படுத்தப் படுவான்.

ஸ்ரீராமானுஜர் யார் சொன்னாலும் அதைக் கேட்பார். பரிசீலிப்பார்.நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள அவர் அலைந்தார். சிரமப்பட்டார். திருவரங் கத்தில் இருந்து திருக்கோட்டியூருக்கு ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள 18 முறை நடையாய் நடந்தார் என்றால், அது விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவருக்குள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. அதனால் தான் அவர் ராமானுஜர் ஆனார்.

பிரம்ம சூத்திர உரை நூலான போதாயன விருத்தி உரையைப் பெற வேண்டும் என்று, அந்த ஓலைச்சுவடிக்காக காஷ்மீர் வரை சென்றார். அது எத்தனை தூரம்? எத்தனை சிரமம்? அந்த நூலும் இடையில் களவாடப்பட்டது. அதை ஒரே ஒரு முறை காதால் கிரகித்து ராமானுஜருக்கு மறுபடியும் சொன்னார் கூரத்தாழ்வான். அப்படியானால் கூரத்தாழ்வானுடைய காதுகள் எத்தனை உயர்வானவை.?

யார் சொன்னாலும் ராமானுஜர் கேட்பதில் தயங்காதவர் என்பதற்கு உதாரணம் இந்த ஒரு பாசுரம்.

பட்டர வேல் அகல் அல்குல் பவளச் செவ்வாய்
பணை நெடுந்தோள் பிணை நெடுங்கண் பாலாம் இன் சொல்
மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில்
மரம்கொணர்ந்தான் அடி யணைவீர் ,அணில்கள் தாவ
நெட்டிலையின் கருங்கமுகின் செங்காய் வீழ
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கி, பீனத்
தெட்ட பழம் சிதைந்து மது சொரி யும்
காழி சீராம விண்ணகரே சேர்மின் நீரே

இது திருமங்கை ஆழ்வாரின் சீர்காழிப் பாசுரம்.

இதில் தெட்ட பழம் என்கிற வார்த்தைக்கு ராமானுஜருக்கு சரியான பொருள் தெரியவில்லை. தெரியாத பொருளை அவர் சீடர்களுக்கு மனம் போனபடி சொல்லவும் விரும்பவில்லை. அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் புழங்குகின்ற சொல். ஆனாலும் இந்தச் சொல்லை குறித்து அறிய வேண்டும் என்கிற ஆர்வம் ராமானுஜருக்கு இருந்தது. சீர்காழியில் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, நான்கைந்து சிறுவர்கள் ஒரு மரத்தின் கனிகளை, கற்களை எறிந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பையன் ‘‘டேய், நல்ல தெட்ட பழமாக பார்த்து அடி’’ என்று சொன்னவுடன், இந்த குறிப்பிட்ட வார்த்தை ராமானுஜருடைய காதிலே விழுந்தது. அவனுக்குப் பொருள் தெரியும் போலிருக்கிறது என்று அவனை அழைத்தார்.

“தெட்ட பழம் என்றால் என்ன பொருள்?” என்று கேட்டார்., “இது தெரியாதா உங்களுக்கு, தெட்ட பழம் என்றால் நல்ல கனிந்த பழம் என்று இந்த பகுதியில் சொல்லுவார்கள்” என்றான். சீர்காழிக்கருகே திருக்குறையலூரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். அதனால் அப்பகுதிச் சொல்லை பாசுரத்தில் கையாண்டார். இதற்கு ஸ்ரீராமானுஜர் ஒரு சிறுவனிடம் கேட்டு விடை தெரிந்து கொண்டு ஆனந்தப்பட்டார்.

வித்வான்களிடம்தான் கேட்க வேண்டும் என்று இல்லை. பெரிய மகான்கள் இப்படிப்பட்டவர்களிடமிருந்து விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நமக்கு காதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கண்களுக்கு மூடி உண்டு. வாய்க்கு மூடி உண்டு. ஆனால் செவிகளுக்கு மூடி இல்லை. அது எந்நேரமும் திறந்தே இருக்கும். எந்த, நல்ல, பயனுள்ள செய்தியையும் பெறுவதற்குக் காத்திருக்கும். அது மட்டும் இல்லை. அந்த காது மடலைப் பாருங்கள். ஒரு கேள்விக்குறி போல இருக்கும். காரணம், எதையும் கேட்டு கேட்டுத் தெரிந்து கொள்வதற் காகத்தான் அந்த அமைப்பில் காதுகளைப் படைத்திருக்கிறான் ஆண்டவன்.

தொகுப்பு: பாரதிநாதன்

The post காதுகள் ஏன் கேள்விக்குறிபோல இருக்கின்றன? appeared first on Dinakaran.

Related Stories: