குடுமியான்மலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

விராலிமலை : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குடுமியான்மலை வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகள் பசுமையை போற்றும் விதமாக ஆயிரம் மரக்கன்றுகள் நட்டனர்.காலநிலை மாற்றம் என்பது மனித குலம் எதிர்கொள்ளும் முட்கள் நிறைந்த சவாலாகும். அமைதியான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நமது முழுப் பொறுப்பாகும். இந்தக் குறிக்கோளை நோக்கி, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பல்வேறு வகைகளை சேர்ந்த ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் நக்கீரன் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, புதுக்கோட்டை மற்றும் துணை இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மாணவர்கள் பசுமையை போற்றும் முன்னெடுப்பாக 500 இந்திய பாதாம், 128 நாவல்பழம், 115 கொடுக்காப்புளி, 100 தாந்திரி, 84 எலுமிச்சை, 50 புங்கம் மற்றும் 23 ஈட்டி போன்ற மரங்கன்றுகளை நட்டனர்.

தற்போதைய சூழ்நிலைகளை பொருத்தவரை வளிமண்டலத்தில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. இது இறுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித குலத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. அதாவது பனிப்பாறைகள் உருகுதல், உணவு வலையின் அழிவு, காடுகள் அழிப்பு ஆகியவை சுற்றுப்புற சூழலை பேணி காக்கப்படாததால் நடைபெறுகிறது.

கொரோனா காலக்கட்டத்தில், ஒரு நாளில் ஐந்து லட்சம் நபர்களுக்கு செயற்கையாக பிராணவாயு தேவைப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு, தாங்கள் நட்டிருக்கும் ஒவ்வொரு மரக்கன்றும் வருங்காலத்தில் சராசரி மனிதனின் 140 நாட்கள் பிராணவாயு தேவையினை பூர்த்தி செய்யும் எனக்கூறி மாணக்கர்கள் நெகிழ்ந்தனர். மேலும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் ‘ உலக சுற்றுச்சூழல் தின’ த்தின் இந்த வருட கருப்பொருள்’ நெகிழியை ஒழிப்போம்’. என்பதாகும் அதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியில் உள்ள நெகிழிகளை அப்புறப் படுத்தியதோடு கல்லூரிக்குள் நெகிழி பயன்பாட்டினை குறைப்போம் எனவும் சூளுரைத்தனர்.

The post குடுமியான்மலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Related Stories: