தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: நேற்று (05.06.2023) மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்று (06.06.2023) காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்றுமுதல் 10-06-2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

06.06.2023 மற்றும் 07.06.2023 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.  ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 -4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தமிழகம் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
06.06.2023: கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என வானிலை மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து மாலை முதல் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
06.06.2023 மற்றும் 07.06.2023 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபட்டுள்ளனர்.

மேலும் அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

The post தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: