மழையின்றி தொடரும் வறட்சி கிராமங்களில் குறையும் காய்கறி சாகுபடி

*சொட்டுநீர் பாசன முறைக்கு மாறும் விவசாயிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் மழையின்றி வறட்சி தொடர்வதால், கிராமங்களில் தற்போது காய்கறிகளின் சாகுபடி குறையும் சூழலில் விவசாயிகள் பெரும்பாலானோர் சொட்டு நீர் பாசன முறையை முழுமையாக நம்பியுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சோளம், மக்காசோளம், நிலக்கடலை, தட்டைபயிறு உள்ளிட்ட மானாவாரி சாகுபடியும் தக்காளி, வெண்டை, கத்தரி, புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் சாகுபடியும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இருக்கும்போது, அதனை எதிர்நோக்கி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை உழுது காய்கறி சாகுபடியில் ஈடுபடுவதை வழக்கமாக கொள்வர். அவை குறிப்பிட்ட நாட்களில் நன்கு விளைச்சல் அடைந்தவுடன், அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு செல்வர்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை பல மாதமாக பெய்ததால், அச்சமயத்தில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் காய்கறி சாகுபடியை மேற்கொண்டனர். ஆனால், வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கத்தால் பல கிராமங்களில், காய்கறிகள் வாடி வதங்கி செடியிலேயே பழுத்து விழுந்தது.

அண்மையில் கோடை மழை சில நாட்கள் பெய்தாலும் வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்தது. மேலும், தற்போது மழையின்றி வறட்சி தொடர்வதால், பல கிராமங்களில் போதிய தண்ணீர் இல்லாமல், சில விவசாயிகள் காய்கறி சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களை உழுது சீர்படுத்தி தென்மேற்கு மழையை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கிடையே சில விவசாயிகள், வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, உழுது தயார் நிலையில் வைத்துள்ள விளை நிலத்தில், சொட்டுநீர் பாசனம் ஏற்படுத்தி, காய்கறி சாகுபடிக்கு தயார்படுத்தி வருகின்றனர். இருப்பினும், வறட்சி குறைந்து ஓரளவு பருவ மழை பெய்தால் மட்டுமே காய்கறி சாகுபடி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மழையின்றி தொடரும் வறட்சி கிராமங்களில் குறையும் காய்கறி சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: