நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் பாராக மாறிவரும் படித்துறைகள்

நெல்லை : நெல்லை மாவட்டத்தின் செழுமைக்கு காரணமான தாமிரபணி நதிக்கரைகளை குடிமகன்கள் பாராக மாற்றி வரும் அவலை நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்வது தாமிரபரணி நதியாகும். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும், குளிப்பதற்கும் தாமிரபரணி ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றி வரும் தாமிரபரணிக்கு கடந்த 2ம் தேதி வைகாசி விசாகம் அன்று பிறந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, நெல்லை டவுன், கொக்கிரகுளம், குறுக்குத்துறை உள்ளிட்ட படித்துறைகளில் தாமிரபரணி தேவியை போற்றி வணங்கும் வகையில் ஆற்றில் மலர்கள் தூவி ஆரத்தி வைபவம் நடத்தப்பட்டது. ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அன்றாட பயன்பாட்டுக்கு தாமிரபரணி நதி இன்றியமையாததாக திகழ்கிறது.

இத்தகைய புனிதமான நதியை குடிமகன்கள் பாழ்படுத்தி வருகின்றனர். தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மன்னர்கள் காலத்தில் கல் மண்டபங்கள் , படித்துறைகள் அமைக்கப்பட்டன. அந்த படித்துறைகளில் அதிகாலையில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தாமிரபரணியில் நீச்சல் அடித்து குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக தாமிரபரணி நதி பல்வேறு காரணிகளால் மாசுபட்டு காணப்படுகிறது. இதனால் ஆற்றில் குளிப்பவர்கள் பல்வேறு நோய் தொற்றுக்களுக்கு உள்ளாகின்றனர்.
இதுபோதாக்குறைக்கு தாமிரபரணி படித்துறைகள் குடிமகன்களின் கூடாரமாக பகல், இரவு நேரங்களில் மாறிவிடுகிறது. அந்திசாயும் நேரத்தில் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளுக்கு மதுவகைகளை வாங்கிவிட்டு காலார நடந்துவந்து தாமிரபரணி நதிகரைகளில் தஞ்சம் அடைகின்றனர். தாமிரபரணி படித்துறைகள், கல் மண்டபங்கள் தற்போது குடிமகன்களின் நிரந்தர கூடாரமாக மாறிவிட்டது.

மது குடித்து விட்டு பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அப்படியே படித்துறைகளில் விட்டு செல்கன்றனர். இதனால் காலையில் குளிக்க வரும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் முகம் சுளிக்கும் நிலை காணப்படுகிறது. நெல்லை டவுன் கருப்பந்துறை, குறுக்குத்துறை, மேலநத்தம், சுடலை கோயில் பகுதி, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை பேராத்துச்செல்வி அம்மன் கோயில் படித்துறை, கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கல் மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளில் குடிமகன்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் மதுக்குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து போடுவதால் பாதசாரிகளின் பாதங்களை பதம் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தாமிரபரணியின் அடையாளங்களாக திகழும் கல் மண்டபங்கள், படித்துறைகளை பராமரித்து பாதுகாக்கவும், குடிமகன்களை கட்டுப்படுத்த வேண்டி போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் பாராக மாறிவரும் படித்துறைகள் appeared first on Dinakaran.

Related Stories: