45 நிமிடத்திற்கு ரூ.1500 வசூல் அலையாத்தி காடு படகு சவாரி கட்டணத்தை குறைக்க வேண்டும்-சுற்றுலா பயணிகள் கோரிக்கை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளியிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களை காக்கும் அரணாக இருக்கின்றன. காடுகளுக்கிடையே செய்யும் பயணம் மனதை சொக்க வைக்கும். இயற்கை அழகு மெய்மறக்க வைக்கும். உள்ளேயிருக்கும் லகூன் பகுதியில் உள்ள சிறு, சிறு தீவுகளின் அழகு பிரமிக்க வைக்கும்.

பறவைகளின் கூச்சல் ரசிக்க வைக்கும். இப்படி ஆற்று வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பார்கள்.
இந்த பயணத்தின்போது படகில் சென்று ஒரு வேளை உணவருந்தி, சுமார் 3மணி நேரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கரை திரும்புவர். இதற்கு கட்டணமாக ரூ.1500 வசூல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீபகாலமாக இங்கு சுற்றுலா பயணிகளை படகில் அழைத்து செல்லும் வனத்துறையினர் குறிப்பிட்ட தூரம் மட்டும் அழைத்து சென்றுவிட்டு காட்டில் படகில் நிறுத்தி சுற்றி காட்டாமல் படகில் இருந்தபடியே 45 நிமிடங்களில் அழைத்து வந்து விடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். ஆனால் சிலருக்கு மட்டும் தூங்க, உணவருந்த என பல்வேறு தனி கவனிப்புகள் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நிலவும் கடும் வெயிலால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் படகுத்துறை களை கட்டியுள்ளது. ஆனால் 10 வனத்துறை அலுவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மேலும் 4 படகுகள் மட்டுமே இருப்பதால் பயணிகள் பலமணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது. எனவே கூடுதல் படகுகளை வாங்கி இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படகு ஏறும் இடத்தில் காட்டுக்கு உள்ளே செல்ல அனுமதியும், படகு டிக்கெட் வாங்கவும் வசதியில்லை, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில்தான் இவற்றை வாங்க வேண்டும். இதனால் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியதிருக்கிறது. இதனால் படகு ஏறும் ஜாம்புவானோடை படகு துறையில் அருகே டிக்கெட் கவுன்ட்டர் அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை காட்டில் இறக்கி விட்டு, காட்டுக்குள் சுற்றி பார்க்கவும், ஓய்வு எடுக்கவும் போதிய அவகாசம் அளிக்க வேண்டும்.

விஐபிகளை அனுமதிக்கும் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளையும் செல்ல அனுமதிக்க வேண்டும். ரூ.1500 என்ற கட்டண தொகையை குறைக்க வேண்டும், வனத்துறையினர் சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும். முன்பு போல பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post 45 நிமிடத்திற்கு ரூ.1500 வசூல் அலையாத்தி காடு படகு சவாரி கட்டணத்தை குறைக்க வேண்டும்-சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: