வெயில் தாக்கம் அதிகரிப்பால் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம், மாரியூர்,மூக்கையூர், திருப்புல்லானி, ஆனைகுடி, கீழகாஞ்சிரங்குடி, கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, பனைக்குளம், நரிப்பாலம், தேவிப்பட்டிணம் சம்பை, முத்துரெகுநாதபுரம் என மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உப்பு நிறுவனங்களின் உப்பு உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் உப்பளங்களில் பழைய வடுகளை அகற்றுதல், வரப்பு மற்றும் பாத்தி கட்டுதல், உப்பு நீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட சீரமைப்பு, பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது.

ராமநாதபுரம் மாவட்ட மன்னார் வளைகுடா கடலின் உப்பு தண்ணீரில் உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வெப்பநிலை இயற்கையாகவே கிடைக்கிறது. கடந்த மார்ச் மாதம் உப்பளத்திற்கு பாய்ச்சப்படும் கடல்நீரின் அடர்த்தி, வெப்பநிலை கிடைத்துள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உப்பளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

உப்பள பாத்திகளில் உப்புநீர் பாய்ச்சப்பட்டு, உற்பத்திக்காக சேமித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் கடைசியில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடந்த மாதம் முதல் மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னும் 3 மாதத்திற்கு உப்பு விளைச்சல் அமோகமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து உப்பு சேகரித்தல், உப்பு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணி நடந்து வருகிறது. உப்பு உற்பத்தி முதல் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவது வரை சுமார் 6 மாத காலத்திற்கு வேலை கிடைப்பதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வெயில் தாக்கம் அதிகரிப்பால் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: