வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் தலைக்குள் புகுந்த இரும்பு நெட் அகற்றாமல் தையல் போட்ட செவிலியர்கள்

*தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அம்பலம்

வேலூர் : வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் அடிபட்டு வந்த லாரி டிரைவரின் தலைக்குள் புகுந்த இரும்பு நெட் அகற்றாமல் செவிலியர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(45) நேற்று காலை சென்னை நோக்கி சரக்கு லாரி ஓட்டிச் சென்றார்.

அப்போது அகரம்சேரி அருகே பின்னால் வந்த தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் கார்த்திகேயன் தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து வர வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதையடுத்து அவருக்கு மருத்துவமனையிலேயே ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துள்ளனர். இதற்கிடையில் தலையில் அடிபட்ட பகுதியில் செவிலியர்கள் தையல் போட்டுள்ளனர். பின்னர் வெகு நேரம் காத்திருந்தும் டாக்டர்கள் வரவில்லை என தெரிகிறது. மேலும் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி கார்த்திகேயன் உறவினர்கள் அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டுள்ளனர்.

அவர்கள் டாக்டர்கள் விரைவில் வந்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மாலை 4 மணி வரை வரவில்லையாம். இதனால் அவரது உறவினர்கள் கார்த்திகேயனை வேலூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கார்த்திகேயனுக்கு ஸ்கேன் செய்தனர். அந்த ஸ்கேனை பார்த்த டாக்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்தின்போது லாரியில் இருந்த இரும்பு நெட் ஒன்று கார்த்திகேயனின் தலைக்குள் புகுந்திருந்தது. அந்த நெட்டை அகற்றாமலேயே தையல் போட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக தலையில் இருந்த இரும்பு நெட்டை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.

இந்த சம்பவம் குறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் நேரில் சென்று கேட்டுள்ளனர். அவர்கள் முறையாக பதில் சொல்லவில்லையாம். இதனால் அவர்கள் அங்கிருந்த புறக்காவல்நிலையத்தில் மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார் அளிக்க சென்றனர். ஆனால் அங்கிருந்த போலீசார் இதுகுறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இந்த சம்பவம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

The post வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் தலைக்குள் புகுந்த இரும்பு நெட் அகற்றாமல் தையல் போட்ட செவிலியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: