கேரள மலைப்பகுதிகளில் விளையும் மிளகு சாகுபடியிலும் தீவிரம் சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைக்கும் ஜவ்வாதுமலைவாழ் மக்கள்

*வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க கோரிக்கை

போளூர் : சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைக்கும் ஜவ்வாதுமலையில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைத்து வருகின்றனர். சமீபகாலமாக தான் பழைய விவசாய முறைகளில் இருந்து நவீன முறைக்கு மாறி வருகின்றனர்.

இந்த பகுதியில் வேளாண் தொழிலை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள மலைவாழ் மக்களை பொருளாதார வளர்ச்சியில் முன்னேற முடியும் என்ற அடிப்படையில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஜவ்வாதுமலைக்கு விவசாய அதிகாரிகள் சென்று அங்குள்ள விவசாய சாகுபடி முறைகளை ஆய்வு செய்து புதிய வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்தி வந்தனர்.
குறிப்பாக கேரளா மலைப்பகுதிகளில் விளையும் மிளகு சாகுபடி திட்டத்தையும் தற்போது ஜவ்வாதுமலையில் தீவிரபடுத்தியள்ளனர்.

வேளாண்மை தொழிலை மட்டும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் ஜவ்வாதுமலையில் வேளாண்துறைக்கான சிறப்பு திட்டங்கள் இதுவரை செயல்படுத்தபடாமல் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜவ்வாதுமலையில் மொத்தம் 10 ஆயிரத்து 600 எக்டர் சாகுபடி பரப்பளவு உள்ளது. இதில் சாமை கேழ்வரகு, கம்பு, மக்காசோளம், கொள்ளு, பேய் எள்ளு, வரகு, திணை போன்ற சிறுதானிய பயிர்கள் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் சிறுதானிய உற்பத்தி அதிகமாக உள்ளது. அதே நெல் சாகுபடியும், கடநத சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மேலும் காய்கனி மலர் சாகுபடி, பழசாகுபடி, என முழுக்க வேளாண் சாகுபடிகளை மட்டும் நம்பியே மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மற்ற ஒன்றியங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்து வேளாண்மைத்துறை திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் ஜவ்வாதுமலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தனி தாலுகா உருவாக்கப்பட்டாலும் தனியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் இதுவரை அமைக்கப்படவில்லை.

இதனால் சிறுதானிய விதைகள், இலவச வேளாண் கருவிகள் போன்ற எதுவும் கிடைப்பதில்லை. எனவே ஜமுனாமரத்துரில் உடனடியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கவும், நம்மியம்பட்டு, புலியூர் கிராமங்களில் வேளாண் துணை கிடங்குகள் அமைக்கவும் தேவையான பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கேரள மலைப்பகுதிகளில் விளையும் மிளகு சாகுபடியிலும் தீவிரம் சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைக்கும் ஜவ்வாதுமலைவாழ் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: