திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே நூற்றாண்டு கண்ட அரசமரத்தை வேருடன் மாற்று இடத்தில் நட்ட கிராம மக்கள்

*உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னுதாரணம்

கண்ணமங்கலம் : திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே நூற்றாண்டு கண்ட அரசமரத்தை வேருடன் மாற்று இடத்தில் நட்ட கிராம மக்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தில் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அத்திமலைப்பட்டு கிராம எல்லையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூற்றாண்டு பழமையான செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமையானது என்பதால் கோயில் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கோயிலை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனையடுத்து கோயிலை சீரமைக்க வேண்டிய முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி கோயில் வெளிப்புற வளாகத்தில் பிரமாண்டமாக இருந்த நூற்றாண்டு பழமையான அரசமரத்தை வெட்டி அகற்ற வேண்டிய சூழல் உருவானது.

ஆனால் தாங்கள் தெய்வமாக வணங்கி வழிப்பட்டு வந்த அரசமரத்தை வெட்டுவதற்கு பக்தர்களும் விருப்பவில்லை. இதனை தொடர்ந்து அரசமரத்தை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடுவது என முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜேசிபி, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அரசமரத்தை வேரோடு பெயர்த்து, அருகிலிருந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நட்டனர். ஒரு மாதத்திலேயே அரச மரம் நன்கு துளிர் விட ஆரம்பித்து விட்டது. இதனால் பக்தர்களும், கிராம மக்களும் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மரங்கள் கிடைத்தால் போதும் அவற்றை வெட்டி விறகாக்கவும், மர பட்டறைகளுக்கு அனுப்பவும் துடிப்பவர்கள் இடையே, சுமார் ₹30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து, பாரம்பரியமிக்க தெய்வீகமான மரத்தை பாதுகாத்த பக்தர்களையும், கிராம மக்களையும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

The post திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே நூற்றாண்டு கண்ட அரசமரத்தை வேருடன் மாற்று இடத்தில் நட்ட கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: