வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ₹20,000 நூதன மோசடி: ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வலை

புழல்: வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி, பட்டதாரி பெண்ணிடம், ₹20 ஆயிரத்தை அபேஸ் செய்த ஆன்லைன் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புழல் அடுத்த கதிர்வேடு, பிர்லா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் நதியா (36). பி.எஸ்சி பட்டதாரி. இவர், இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி நதியாவின் செல்போனுக்கு ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தகவல்களை பெற ₹10 பதிவு கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்படி, அந்நிறுவனம் அனுப்பிய லிங்க் மூலமாக நதியா ஆன்லைனில் ₹10 செலுத்தியுள்ளார். மேலும், தனது செல்போனுக்கு 2 முறை வந்த ஓடிபியையும் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, நதியாவின் வங்கி கணக்கிலிருந்து 2 முறை ₹10,420 என, மொத்தம் ₹20,840 எடுக்கப்பட்டதாக, அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதை பார்த்ததும், ஆன்லைன் மோசடி கும்பலின் வேலைவாய்ப்பு தகவல் வலையில் சிக்கி, ஆயிரக்கணக்கில் பணம் இழந்ததை அறிந்து நதியா அதிர்ச்சியடைந்

தார்.இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், பணமோசடி மற்றும் இணையவழி குற்றம் என்பதால், குற்றம் மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் ஆன்லைன் மோசடி கும்பல் பற்றி விசாரிக்கின்றனர். பெண்ணிடம் ₹25,000 பறிப்பு: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அலமேலு (37). இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதே குதியில் உள்ள அம்மா உணவகம் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அவர் வைத்திருந்த மணிபர்சை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பினர். அதில், ₹25 ஆயிரம் இருந்துள்ளது. இதுகுறித்து, அலமேலு கொடுத்த புகாரின்பேரில், நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், பைக்கின் பதிவு எண்ணை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ₹20,000 நூதன மோசடி: ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: