ரூ.715 கோடி கடன் பெற்று மோசடி சிவசங்கரன் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: வங்கியில் ரூ.715.40 கோடி கடன் பெற்றும் அதை திரும்ப செலுத்தாத நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி தொழிலதிபர் சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பின்லாந்து நாட்டை சேர்ந்த வின் விண்டோய் என்ற நிறுவனத்துக்கு ஐடிபிஐ ரூ.322.40 கோடியை, கடந்த 2010ம் ஆண்டு கடனாக வழங்கியது. இதேபோல் அஸ்செல் சன்சைன் என்ற நிறுவனத்துக்கு இந்த வங்கி ரூ.393 கோடி கடன் கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது, வராக்கடன் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஐடிபிஐ வங்கிக்கு ரூ.715.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தொழிலதிபர் சி.சிவசங்கரனை தேடி வந்தனர். அவர் மீது கம்பெனி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து, அவரை கண்டுபிடிப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டது சிபிஐ. இந்நிலையில் கடந்த 2018 ஆகஸ்ட் 6ம் தேதி சிவசங்கரனை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அவர் வெளிநாடு செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

சிவசங்கரன் 2019 ஜனவரி 27ல் இத்தாலி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகவே அவருக்கு மீண்டும் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து சிவசங்கரன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மேல் முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பணி தொடர்பாக வெளிநாடு சென்றுவர குறுகிய காலத்திற்கு அனுமதி அளிக்க கோரி சிவசங்கரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘மனுதாரர் மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. சில வழக்குகளில் சாட்சி விசாரணையும் நடைபெற்று வருகிறது. மனுதாரர் சென்னையில் எந்த நிரந்தரமான முகவரியையும் கொடுக்காமல் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ தரப்பில் மேல் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மனுதாரரை வெளியே விட்டால் விசாரணை நீர்த்துப்போய்விடும். கடுமையான பொருளாதார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் மனுதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். இந்த வழக்கில் பெரிய அளவில் பணம் சம்மந்தப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார். இதனால் ரூ.715.40 கோடியை சுருட்டிய வழக்கில் தொழில் அதிபர் சிவசங்கரன் வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடு சென்றால் அவர் மீண்டும் திரும்ப மாட்டார் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான பொருளாதார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவரும் மனுதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும்.

The post ரூ.715 கோடி கடன் பெற்று மோசடி சிவசங்கரன் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: