கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டது: மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறை மடக்கியது; களக்காடு – முண்டந்துறையில் விடப்பட்டது

உத்தமபாளையம்: கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் காட்டுயானையை வனத்துறையினர் மயக்க ஊசிகள் போட்டு நேற்று அதிகாலை பிடித்தனர். அங்கிருந்து லாரி மூலம் களக்காடு முண்டந்துறை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 8 பேரை கொன்று, வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி அரிசிக்கொம்பன் என்ற 25 வயது ஆண் யானை அட்டகாசம் செய்து வந்தது.

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் கடந்த மே 27ம் தேதி புகுந்த அரிசிக்கொம்பன், நகரின் முக்கிய தெருக்களில் உலா வந்து பொதுமக்களை விரட்டி அச்சுறுத்தியது. பின்னர், கம்பம் நகரில் இருந்து வெளியேறி, தோட்டங்களின் வழியே எரசக்கநாயக்கனூர் – ராயப்பன்பட்டிக்கு சென்று, அங்கிருந்து சண்முகாநதி அணை அருகில் உள்ள காப்புக்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டது. அடர்ந்த வனப்பகுதியில் நின்ற அரிசிக்கொம்பனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மீண்டும் ஊருக்குள் வரவிடாமல் தடுக்கவும், மயக்க ஊசி போட்டு பிடிக்கவும் தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில், உத்தமபாளையம் அருகே, சின்ன ஓவுலாபுரம் பெருமாள்மலை வனப்பகுதியில் ஜூன் 4ம் தேதி நள்ளிரவில் அரிசிக்கொம்பன் சுற்றி திரிந்ததை, ரேடியோ காலர் சிக்னலை வைத்து வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் தலைமையில் வனத்துறையினர் விரைந்தனர். இதனால், சின்னஓவுலாபுரம், புத்தம்பட்டி, எரசை, ஆனைமலையன்பட்டி செல்லும் சாலைகள் முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தன. பொதுமக்களின் டூவீலர், கார்கள், சரக்கு வாகனங்கள் செல்வதற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் சின்னஓவுலாபுரம் அடர்ந்த காட்டில் இருந்து உணவு தேடி வெளியே வந்தது அரிசிக்கொம்பன். கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையிலான 5 மயக்கவியல் மருத்துவர்கள், நள்ளிரவு 12.45 மணியளவில் அரிசிக்கொம்பனை நெருங்கி பிஸ்டல் மூலம் மயக்க ஊசி செலுத்தினர். அதிகாலை 3.30 மணியளவில் அது மயக்க நிலையை அடைந்தது. கும்கிகளான சுயம்பு, சக்தி உள்ளிட்ட 3 யானைகள் அங்கு கொண்டு வரப்பட்டன. யானை தட வல்லுனர் குழுவினர், பளியர்கள் அரிசிக்கொம்பன் அருகில் சென்று, 3 கும்கி யானைகள் உதவியுடன் பாதுகாப்பாக வனத்துறை லாரியில் ஏற்றினர்.

அங்கிருந்து களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவித்தனர். அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கம்பம் பகுதியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால், 8 நாள் இடைவெளிக்குப் பிறகு பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கம்பம் பகுதியில் இருந்து வனத்துறை லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட அரிசிக்கொம்பனுக்கு சாலையின் இருபுறமும் நின்றவாறு அப்பகுதி மக்கள் கையை அசைத்து விடைகொடுத்தனர். கம்பம் பகுதி வன உயிர் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வனங்களும், யானை வழித்தடங்களும் அழிக்கப்படுவதன் காரணமாகவே அரிசிக்கொம்பன் போன்ற காட்டுயானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி மக்களுக்கு இடையூறு தரும் சூழல் ஏற்படுகிறது. அரிசிக்கொம்பன் குடியிருப்புகளில் புகுந்து தாக்குதல் நடத்த மனித ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணம். கம்பம் பகுதி மக்கள் கனத்த இதயத்துடன் அரிசிக்கொம்பனுக்கு விடைகொடுத்திருக்கிறோம்’’ என்றனர்.

* மனு முடித்துவைப்பு
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரிசிக்கொம்பன் யானையை பிடித்து கேரளா அரசிடம் ஒப்படைக்கவும், மீண்டும் தமிழ்நாட்டிற்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்கவும், மீறி வரும் நிலையில் மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் 11(1) பிரிவின் படி வேட்டையாட உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டது. யானை தாக்கியதில் இறந்தவருக்கு அரசின் சார்பில் ரூ.5 லட்சமும், சேதமடைந்த ஆட்டோவுக்கு ரூ.20 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு பாதிப்பிற்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்கப்படும்’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

* கோதையாறு மலைப்பகுதியில்…
கம்பம் பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மலை வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். வழியில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தியதுடன், கோவில்பட்டி அருகே யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி ரயில்வே கேட் பகுதிகளில் 25 ஆயிரம் வோல்ட் உயர் அழுத்த மின்கம்பிகள் உள்ளதால் மிக கவனமாக தண்டவாளத்தை கடந்து அரிக்கொம்பன் யானை மணிமுத்தாறு மாஞ்சோலை மலைப்பகுதிக்குள் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். மாலை 5:20 மணி அளவில் மணிமுத்தாறு வன சோதனை சாவடிக்கு யானை வந்தது. யானை வந்த லாரி சோதனை சாவடியை தாண்டியதும் மற்ற வாகனங்கள் எதுவும் உள்ளே செல்லாதவாறு வனத்துறையினர் நுழைவாயிலை அடைத்தனர். பின்னர் அரிசிக்கொம்பன் யானை கோதையாறு அடர்ந்த மலைப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

* ‘வனப்பகுதியில் விடக்கூடாது’
அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதியில் விடக்கூடாது என்றும், கேரள வனத்துறையிடம் ஒப்படைக்கக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தரப்பில் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று முறையிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினர்.

* மணிமுத்தாறில் போராட்டம்
மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் அரிசி கொம்பன் யானையை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 10பேரை போலீசார் கைது செய்தனர்.

The post கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டது: மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறை மடக்கியது; களக்காடு – முண்டந்துறையில் விடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: