மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை

அம்பத்தூர்: மின் பயன்பாட்டை துல்லியமாக, தானியங்கி முறையில் கணக்கிட 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை வாங்க மின்சாரத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன. இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய ‘ஸ்டேடிக்’ என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மின்வாரிய ஊழியர்கள், மின் பயன்பாட்டு அளவை கணக்கீடு செய்து, நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து, நுகர்வோர் அந்த கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சில ஊழியர்கள் தாமதமாக மின் பயன்பாட்டு அளவை கணக்கெடுப்பதால் குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக, ஸ்மார்ட் மீட்டரில் தகவல் தொழில்நுட்ப சாதனம் பொருத்தி மின்வாரிய அலுவலக சர்வருடன் இணைக்கப்படும். கணக்கெடுக்கும் தேதி கணினியில் மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், அந்த தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் பயன்பாடு கட்டணம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் பயன்பாட்டு அளவை கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. தானியங்கி முறையில் மின் கட்டண விவரம் எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். கடைசி தேதிக்குள் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும். ஆனால், விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. ஒரு மீட்டரை பொருத்த ரூ.6 ஆயிரம் வரை செலவிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.. அதைவிட குறைந்த செலவில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

இதற்காக நுகர்வோரிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. தமிழகத்தில் உள்ள 3 கோடி இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதன்முதலில் ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. அதன் மூலமாக 1.42 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டரை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இதில், தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதன் மூலம், முதல்கட்டமாக 1.17 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், 2வது கட்டமாக 1.2 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், 3வது கட்டமாக 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும்.
தற்போது இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 45 நாட்களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் ஒன்றிய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* மின் இழப்பு குறையும்
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘மின்னூட்டிகள் மற்றும் மின்மாற்றிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு தொலைத்தொடர்பு வசதிகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டது. இதற்கான அனைத்து அளவீட்டு வேலைகளும் டோடெக்ஸ் முறையில் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் ஒன்றிய அரசின் மறுசீரமைக்கப்பட்ட விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய சிறப்பு அலுவல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசு 13 மாநிலங்களுக்கு ரூ.3,03,758 கோடி ஒதுக்கியுள்ளது, தமிழ்நாட்டிற்கு ரூ.10,759 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 70 சதவீதம் நிதி விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மின் இழப்பு குறைப்பு மற்றும் மின்கட்டமைப்பை நவீனமயமாக்கல் பணிகளும் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது,’’ என்றார்.

The post மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை appeared first on Dinakaran.

Related Stories: