சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் வீடியோக்கள்: ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்து பைக்குக்கு போட்ட பெட்ரோலை டியூப் மூலம் உறிஞ்சிய ஊழியர்கள்; பெரம்பூரில் நடந்த அட்டகாசம்

சென்னை: பெரம்பூரில் ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளரின் பைக்கிலிருந்து பெட்ரோலை மீண்டும் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30க்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து பல மாதங்களாக பார்க்க முடியாத 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போது வெளியில் வர ஆரம்பித்துள்ளன. ஆனால், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்குள் அவர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக பெட்ரோல் பங்க், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க உரிமையாளர்கள் மறுக்கின்றனர். அந்த வகையில் பெரம்பூர் பகுதியில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (33) என்பவர் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது பைக்கிற்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

பிறகு 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். பெட்ரோல் பங்க் ஊழியர்கள், சில்லரை இல்லை என முதலில் கூறினர். தொடர்ந்து வாக்குவாதம் எழவே, 2000 ரூபாய் நோட்டை வாங்க முடியாது என கோபமாக கூறினர். அதற்கு ஹரிபிரசாத், தன்னிடம் வேறு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள், பைக்கில் போட்ட பெட்ரோலை சிறிய அளவிலான டியூப் மூலம் உறிஞ்சி எடுத்துக் கொண்டனர். இந்த காட்சிகளை ஹரிபிரசாத், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

The post சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் வீடியோக்கள்: ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்து பைக்குக்கு போட்ட பெட்ரோலை டியூப் மூலம் உறிஞ்சிய ஊழியர்கள்; பெரம்பூரில் நடந்த அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: