மாமல்லபுரம்: நரிக்குறவர்களுக்கு, எம்பிசி பிரிவில் இருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் பெண்கள் சிலர் கடந்த 2021ம் ஆண்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு மதிய அன்னதானம் சாப்பிட சென்ற போது, அங்குள்ள கோயில் நிர்வாகத்தினர் விரட்டியத்த சம்பவம் சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து, 2021ம் ஆண்டு தீபவாளி தினமான நவம்பர் 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வீட்டு மனைப்பட்டா, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, கடன் உதவிக்கான ஆணை, வீடு கட்டுவதற்கு ஆணை ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, நரிக்குறவ மக்கள் தங்களை எம்பிசி பிரிவில் இருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். எனவே தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் எம்பிசி பிரிவில் உள்ள நரிக்குறவர்களை எஸ்டி பிரிவுக்கு மாற்ற அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் 54 நரிக்குறவ குடும்பங்களுக்கு எம்பிசி பிரிவில் இருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்றம் செய்வதற்காக திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி தலைமையில், பூஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில், ஏராளமான நரிக்குறவர்கள் தங்களது தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொண்டனர். இதில், சிறப்பாளராக செங்கல்பட்டு ஆர்டிஓ இப்ராகிம் கலந்து கொண்டு, 54 நரிக்குறவ குடும்பங்களுக்கு எம்பிசி பிரிவில் இருந்து எஸ்டி பிரிவுக்கு மாற்றுவதற்கான ஆணைகளை வழங்கினார். அப்போது, பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணை தாசில்தார் சையது, வருவாய் ஆய்வாளர் ரகு, விஏஓ முனுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் ஆர்டிஓ இப்ராகிம் நிருபர்களிடம் கூறுகையில்: பூஞ்சேரியில் வசிக்கும் 56 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஏற்கனவே அங்குள்ள மேய்க்கால் இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, வழங்கப்பட்ட இடம் எந்த இடம் என தெரியவில்லை என்று கூறினர். மேலும், அவர்களுக்கு, வழங்கப்பட்டப்பட்டா எண்ணை வைத்து, பாரபட்சமின்றி அவர்களுக்கு இடம் ஒதுக்கித்தரப்படும். மேலும், வீடு கட்ட தலா ஒருவருக்கு ரூ..1.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இன்னும், சில தினங்களில் 54 குடும்பங்களுக்கும் எம்பிசியில் இருந்து எஸ்டிக்கு மாற்றியதற்கான சான்றிதழ் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நரிக்குறவர்களை எம்பிசி-ல் இருந்து எஸ்டி-க்கு மாற்றுவதற்கான சிறப்பு முகாம்: 54 குடும்பங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.