முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையினர் கலைஞரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வருங்கால தலைமுறையினர் கலைஞரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சியோடு நடத்திட மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நூற்றாண்டு விழாக் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், முன்னாள் எம்.பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உடனிருந்தார். இக்கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் குறித்து தீர்மானிக்கப்பட்டது. மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டிகளில் பங்கு பெறுவோர் அதற்கான செயலியில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

முதல் கட்டமாக மாவட்ட வாரியான போட்டிகள், இரண்டாவது கட்டம் மண்டல வாரியான போட்டிகள், மூன்றாவது கட்டம் மாநில அளவிலான போட்டிகள், கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கலை இரவு, ‘கலைஞர் சுடர்’ ஏந்தி, கலைஞர் கோட்டம் வரை தொடர் ஓட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் தொழிற்சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள், சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள், கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இடங்களான கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சமத்துவபுரங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அந்த இடங்களில் நிகழ்ச்சிகள், கலைஞர் 100 என்ற பெயரில் பேஸ்புக், டிவிட்டர், யூட்யூப் பக்கங்களைத் தொடங்கி பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு கலந்துரையாடல் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: