அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பதுங்கியது ஏன்? விசாரணையில் குதித்த தொண்டர்கள்

சென்னை: அமித்ஷாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் திடீரென அமைதியாகிவிட்டார். அவர் அமைதியானது ஏன் என அதிமுக தொண்டர்கள் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டனர். இதுகுறித்து மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் செய்தார்.

அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவர் எல்லாம் ஒரு தலைவரா, எனக்கு இணையான அரசியல்வாதியைப் பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என்று அவரை பொருட்டாக மதிக்காமல் பேட்டி அளித்தார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரும்படி அமித்ஷா அழைத்தார். அவர் டெல்லி புறப்பட்டபோது அதிமுக தலைவர்களான வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் சென்றனர். பின்னர் அவர்கள் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது அண்ணாமலை குறித்து எடப்பாடி பழனிசாமி தொடர் குற்றச்சாட்டுக்களை கூறினார்.

சிறிது நேரத்தில் அண்ணாமலையை அழைத்த அமித்ஷா, இருவரும் இனி மோதிக் கொள்ள வேண்டாம் என்று கூறினார். அங்கு அண்ணாமலையைப் பார்த்த எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். அதேநேரத்தில், அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பேசும்போது, பழைய அதிமுக ஆட்சியின்போது மாஜி அமைச்சர்களின் சொத்து மற்றும் ஊழல்களின் பட்டியல் தன்னிடம் உள்ளது. அதனால் பேசாமல் நாங்கள் சொன்னபடி கூட்டணியில் நீடியுங்கள். உங்களை கண்டுகொள்ள மாட்டோம். இல்லாவிட்டால் இப்போது ஒரு சில முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில்தான் ஐடி ரெய்டு நடந்துள்ளது. விரைவில் அனைவரது வீடுகளிலும் நடக்கும் என்று மறைமுகமாக மிரட்டியதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் டெல்லியில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை தான் தாக்கிப் பேசவே இல்லை என்று பல்டி அடித்தார். ஆனால் சில நாட்கள் அமைதியாக இருந்த அண்ணாமலை அடிக்கடி அதிமுக குறித்து பேச ஆரம்பித்துள்ளார். அதேநேரத்தில், டெல்லியில் இருந்து சேலம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, ஓரிரு நாட்களில் சென்னை திரும்பினார். சென்னையில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின்னர் சேலம் சென்றவர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக எங்கும் செல்லாமல் அமைதியாக உள்ளார்.

கட்சி நிகழ்ச்சிகளிலோ, ஆர்பாட்டத்திலோ, தொண்டர்கள், நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளிலோ அவர் கலந்து கொள்ளாமல் உள்ளார். அவர் பெயரில் அறிக்கை மட்டுமே வருகிறது. ஆனால் அவரை பொது நிகழ்ச்சிகளில் காண முடிவதில்லை. ஏன் சேலத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் கூட அவரை பார்க்க முடியவில்லை. டெல்லி சென்று வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி அமைதியாகிவிட்டது ஏன் என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் விவாதப்பொருளாகவே மாறிவிட்டது. அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவார்களுடன் ஆலோசனை, டிடிவி தினகரனுடன் சந்திப்பு மற்றும் கொங்கு மண்டலத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது, சசிகலாவை விரைவில் சந்திப்பது என்று அடுத்தடுத்த நிகழ்வுகளை நோக்கி செயல்பட்டு வருகிறார்.

ஆனால் எடப்பாடியின் திடீர் மவுனம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் புதிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் விசாரித்தபோது அவருக்கு கால் வலி இருந்ததாகவும் அதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், தீவிர சுற்றுப் பயணம் மற்றும் கார்களில் பயணம், நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையில் உள்ளார் என்று தெரிவித்தனர். அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த காரணங்களை கூறினாலும், தொண்டர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் பரவிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பதுங்கியது ஏன்? விசாரணையில் குதித்த தொண்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: