கன்னியாகுமரி அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தாய், காதலன் மீது போக்சோ வழக்கு: ஒரு மாதமாகியும் கைது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே 10 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தில் தாய், அவரது காதலன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் போலீசார் இழுத்தடிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குமரி – நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர், வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயதும், மகளுக்கு 8 வயதும் ஆகிறது. குழந்தைகள் இருவரும் கன்னியாகுமரி அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மாதந்தோறும் பணம் அனுப்பி வந்தார். அந்த பணத்தில் அவரது மனைவி பைக், கார் மற்றும் தங்க நகைகளை வாங்கி குவித்தார். தினமும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசுவதும் வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென குழந்தைகள் இருவருடன் பேசுவதற்கு அவரது மனைவி தடை விதித்தார். போன் செய்யும் போதெல்லாம் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள் என ஏதாவது காரணத்தை கூறி, குழந்தைகளுடன் போனில் பேசுவதை தடுத்து வந்தார். இந்த நிலையில் திடீரென கார் டிரைவருக்கு மனைவியிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. உன்னுடன் வாழ பிடிக்க வில்லை. எனவே நான் உன்னை விவாகரத்து செய்கிறேன் என கூறப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், அவசர, அவசரமாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை காண வில்லை. பணம், நகைகள், சொத்து பத்திரங்கள் எதுவும் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடமும் விசாரித்தார். அப்போது தான் தனது மனைவி, வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருப்பதும், அவர்கள் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியில் வசிப்பதும் தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்று மனைவியை சந்தித்து தன்னுடன் வரும் படி அழைத்தார். ஆனால் அவர் மீண்டும் சேர்ந்து வாழ முடியாது என கூறினார். அப்போது குழந்தைகள் இருவரும் தனது தந்தையை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடித்து, எப்படியாவது எங்களை அழைத்து சென்று விடுங்கள். அம்மா, மிகவும் கொடுமைப்படுத்துகிறாள் என கூறி கதறி உள்ளனர். இது குறித்து கேட்ட போது, அவரது மனைவி சரியாக பதில் சொல்ல வில்லை. குழந்தைகளை என்னுடன் அனுப்பி விடு என கூறிய போது, மறுத்தார். உடனடியாக செல்ல வில்லை என்றால், கள்ளக்காதலனை வரவழைத்து தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு டிரைவர் புறப்பட்டார். வீட்டுக்கு வந்த அவரது மகன் எதுவும் பேசாமல் இருந்தான். இரவு நேரங்களில் திடீர், திடீரென எழுந்து கதறினான். இதையடுத்து உறவினர் வீட்டுக்கு மகனை அழைத்து சென்று தங்க வைத்தார். தந்தையுடன் வந்த சில நாட்கள் கழித்து அவரது மகனின் நடவடிக்கைகள் மெல்ல, மெல்ல மாறின. நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக கூற தொடங்கினான்.

அப்போது தான் மனைவியுடன் கள்ளகாதலில் இருந்த வாலிபர், 10 வயது சிறுவனையும் பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு சிறுவனின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். தாய் கண் முன்னாலேயே, சிறுவனுக்கு இந்த பாலியல் வன்கொடுமை அரங்கேறி உள்ளது. இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, கடந்த மாதம் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிரைவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் இதுவரை எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. வழக்குபதிவு செய்து சுமார் 1 மாதம் ஆகும் நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வில்லை. எனவே தற்போது மீண்டும் எஸ்.பி.யை சந்திக்க டிரைவர் முடிவு செய்துள்ளார். மேலும் தனது மகளையும், மனைவியிடம் இருந்து மீட்க வேண்டும். மகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். பொதுவாக போக்சோ வழக்குகளில் எந்த வித தாமதமும் கூடாது. பாதிக்கப்பட்ட சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு பெற்ற பின்னரும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்தள்ளது. எனவே கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கன்னியாகுமரி அருகே 10 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தாய், காதலன் மீது போக்சோ வழக்கு: ஒரு மாதமாகியும் கைது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: