நெல்லையில் இன்று அதிகாலை அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் படுகாயம்

நெல்லை: நெல்லையில் இன்று அதிகாலை வேகமாக வந்த அரசு பஸ் பள்ளி வளாக சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். ஊட்டியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் வேகமாக வந்தது. இதேபோல் நெய்வேலியில் இருந்து மற்றொரு அரசு பஸ் கன்னியாகுமரி நோக்கி வந்தது. இந்த இரு பஸ்களும் இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு தச்சநல்லூர் பகுதியில் வந்த போது ஒன்றையொன்று முந்த முயன்றதாக தெரிகிறது. அப்போது ஊட்டியில் இருந்த கன்னியாகுமரி சென்ற பஸ் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி பக்கவாட்டு பகுதியில் பாய்ந்து அங்குள்ள தனியார் பள்ளி காம்பவுன்டு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேருக்கு லோசன காயமும், மேலும் 5 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. மின்கம்பம் ஒன்றும் சேதடைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் போலீசார், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர், அரசு விரைவு போக்குவரத்துக்கழக மீட்பு குழுவினர், மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மின் விநியோகம் வழங்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தச்சநல்லூர் – தாழையூத்து இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் குறுகலான இடமே உள்ளது. மேலும் இங்கு சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் சாலை சீரமைப்புக்காக நீண்ட நாட்களாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த குறைகளை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post நெல்லையில் இன்று அதிகாலை அரசு பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: