ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் `வைபை’ செயல்படாததால் பயணிகள் கடும் ஏமாற்றம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் `வைபை’ செயல்படாததால் ரயில் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ரயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக `வைபை’ வசதியை தொலைதூர ரயில் நிலையங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2016ம் ஆண்டு மும்பையில் முதன்முதலாக வைபை சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு ரயில் நிலையங்களில் வைபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரையில் சுமார் 6,000 ரயில் நிலையங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 418 ரயில் நிலையங்களில் வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு கட்டமாக ரயில் நிலையங்களில் வைபை வசதி அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளி குறைக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைபை வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதனால் இலவசமாக 30 நிமிடம் இணையதள சேவையை பொதுமக்களும், ரயில் பயணிகளும் பயன்படுத்தி வந்தனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில்கள் எங்கு வந்து கொண்டிருக்கிறது, எந்தெந்த ரயில்கள் செல்கிறது என்ற விவரங்களை செல்போன் மூலம் ரயில் நிலையத்தில் இலவசமாக இணைக்கப்படும் வைபை வசதியை இணைத்து அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களின் செல்போனில் டேட்டா வசதி தீர்ந்து போகும் நிலையில் பயணிகளுக்கு இந்த வைபை வசதி பயனுள்ளதாக இருந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரயில் நிலையத்தில் வைபை சேவை இயங்கவில்லை. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு உதவும் வகையில் வைபை வசதி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் `வைபை’ செயல்படாததால் பயணிகள் கடும் ஏமாற்றம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: