ஜூன் முதல் வாரத்திற்கு பிறகும் நீரின்றி வறண்டு கிடக்கும் அருவிகள் குற்றாலத்தில் சீசன் துவங்குவது எப்போது?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி: ஜூன் முதல் வாரத்திற்கு பிறகும் அருவிகள் நீரின்றி வறண்டு போய் கிடப்பதால் குற்றாலத்தில் சீசன் துவங்குவது எப்போது என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது, குற்றாலம் வரும் பயணிகள் வெறும்பாறையை மட்டுமே பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த சமயத்தில் மெல்லிய சாரலும், மிதமான வெயிலும், இதமான தென்றல் காற்றும் காணப்படும். ஜூன் மாதத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அவ்வளவாக இருக்காது. பெருமழையாக அல்லாமல் மெல்லிய சாரலாகப் பொழியும். பல சமயங்களில் மிதமான வெயிலும், மெல்லிய சாரலும் ஒரே சமயத்தில் காணப்படும். சீசனை முன்னிட்டு அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஒரு அம்சமாகும். கோடை வாசஸ்தலங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கண்டு களிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், குற்றாலத்தில் அருவி குளியல் என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு தரும் ஒரு அம்சமாக சுற்றுலாப் பயணிகள் பார்க்கின்றனர். இத்தகைய சீசன் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான தொடக்கத்தை கொடுக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தின் 15ம் தேதியே சாரல் பொழிய துவங்கியது. அன்றைய தினமே அருவிகளில் தண்ணீரும் விழுந்தது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இதே நிலை காணப்பட்டது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக சாரல் மாயமாகிவிட்டது. இதன் காரணமாகவே கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் 10ம் தேதி தான் ஐந்தருவி படகு குழாமில் படகு சவாரி துவங்கியது.

அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் சொல்லி வைத்தார் போல் ஜூன் மாதத்தின் முதல் தேதியில் சீசன் துவங்கியது. மிக அரிதாக ஒரு சில ஆண்டுகள் சீசன் துவக்கம் ஜூன் மாதத்தில் மூன்றாவது வாரத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு குற்றாலம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், சீசன் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 7ம் தேதி துவங்கும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போல தற்போது மே மாதத்தில் இறுதியில் அல்லது ஜூன் முதல் தேதியில் சீசன் துவங்கி இருந்தால் இந்நேரம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி இருக்கும். ஆனால் ஜூன் மாதத்தின் 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்த போதும் காற்று நன்றாக வீசி வரும் நிலையிலும் சாரல் இன்னும் பெய்யத் துவங்கவில்லை. இதனால் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் வறண்டு காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையும் ெபரியளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது குற்றாலம் வருகின்ற சுற்றுலா பயணிகளில் சிலர் ஆர்ப்பரிக்கும் அருவிக்கும் பதிலாக வெறும் பாறையை மட்டும் பார்வையிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.இதற்கிடையே வானிலை ஆய்வு மையங்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் குற்றாலம் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் சீசனை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

The post ஜூன் முதல் வாரத்திற்கு பிறகும் நீரின்றி வறண்டு கிடக்கும் அருவிகள் குற்றாலத்தில் சீசன் துவங்குவது எப்போது?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: