மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டுக்கு தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இம்பால்: மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இரு குழுக்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கல்வீச்சு, தீவைப்பு, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடப்பதால், அங்கு அமைதியை நிலை நிறுத்த ராணுவம் களம் இறங்கியுள்ளது. மேலும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டார். அவர் 3 நாட்களாக மணிப்பூரில் முகாமிட்டு பல்வேறு பிரிவினரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

ஆனால் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் கச்சிங் மாவட்டம் செரோ சந்தையில் உள்ள பல வீடுகளுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ ரஞ்சித்தின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இருப்பினும், வன்முறைகள் நடைபெறாத சில பகுதிகளில் போலீசார் கண்காணித்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதேநேரம் இம்பால் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒருவர் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டுக்கு தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: