ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் அதிமுக மாஜி அமைச்சரை முற்றுகை திமுக, அதிமுகவினர் தள்ளுமுள்ளு

 

ஆலந்தூர்: ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதியை முற்றுகையிட்டதால் திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சென்னை ஆலந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பகுதி செயலாளர் பரணி பிரசாத் உள்பட அதிமுகவினர் இன்று காலை ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், தொண்டர்ணி துணை அமைப்பாளர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்து நுழைவு வாசலில் நின்றுக்கொண்டனர். அந்த சமயத்தில் அங்குவந்த வளர்மதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையாவிடம் மின் வெட்டு பிரச்னையை சரி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அங்கு வந்த திமுகவினர், ‘’ கடந்த 10 ஆண்டு ஆட்சியில் நீங்க என்ன செய்தீர்கள்’’ என்று கேட்டு திமுகவினர் கோஷமிட்டனர். இதன்காரணமாக இரண்டு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அப்போது திமுகவினர், ‘’இங்கு மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. இதை அறியாமல் அதிமுகவினர் கூறும் தவறான தகவலுக்கு நீங்கள் வரலாமா’’ என்று கேட்டதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து திமுக, அதிமுகவினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

The post ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் அதிமுக மாஜி அமைச்சரை முற்றுகை திமுக, அதிமுகவினர் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Related Stories: