சிக்னலிங் கொடுப்பதற்கான கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்: ரயில்வே மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு..!!

சென்னை: சிக்னலிங் கொடுப்பதற்கான கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 தேதி ஒடிசா மாநிலம் பாலசூர் பகுதியில் கொல்கத்தா சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்- ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 288 பேர் பலியாகினர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு முக்கிய மூலகாரணம் எலெக்ட்ரானிக் இன்டெர்லாக்கிங் மாற்றுதல் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதன் பிறகு நேற்றைய தினம் ரயில்வே வாரியம், சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் விபத்து நேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் சார்பாக அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதில், சிக்னலிங் கொடுப்பதற்கான கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

டபுள் லாக்கிங் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பல ரயில்வே சிக்னல் உள்ளிட்ட உபகரணங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துமாறு உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏதேனும் குழப்பங்களோ அல்லது பிரச்சினைகளோ இருந்தால் வரும் ஜூன் 14ம் தேதிக்குள் அது குறித்த விவரத்தை முழுமையாக ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிக்னலிங் கொடுப்பதற்கான கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்: ரயில்வே மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: