தண்ணீர் வரத்து இல்லாததால் கவியருவிக்கு தொடர் தடை-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார், பரம்பிகுளம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு சீசனை பொறுத்தும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

இதில் ஆழியாருக்கு வருவோர் மற்றும் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும், அருகே உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை காலத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வரும்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். இதில் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் முதல் தொடந்து சில மாதமாக பெய்த தென்மேற்கு பருவ மழையால் கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பல மாதமாக தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததுடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது.

அதன்பின் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கத்தால் கவியருவியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை வரை அருவியின் ஓரத்தில் நூல்போன்று வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து, கடந்த மார்ச் மாதம் துவக்கத்திலிருந்து முற்றிலுமாக நின்றுபோனது.

இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், பள்ளி கோடை விடுமுறையையொட்டி ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர், அருவிக்கு செல்வதை தொடர்ந்தனர். ஆனால் அங்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இருப்பினும், கவியருவி செல்லும் வழி அடைக்கப்பட்டதுடன், அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த நிலை நேற்றுடன் மூன்று மாதமாக நீடித்துள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் தண்ணீர் இல்லாததால், இதனை கருத்தில் கொண்டு, கடந்த மார்ச் மாதம் துவக்கத்திலிருந்து சுற்றுலா பயணிகள் செல்ல தடை வதிக்கப்பட்டது. மேலும், சோதனைச்சாவடியில் நுழைவு டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த நிலை தொடர்ந்து 2 மாதமாக நீடித்துள்ளது. இனி கனமழை பெய்து, அருவியில் தண்ணீர் கொட்டினால் மட்டுமே, தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்’ என்றனர்.

The post தண்ணீர் வரத்து இல்லாததால் கவியருவிக்கு தொடர் தடை-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: