கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எதிரொலி; விமானங்களில் அலைமோதும் கூட்டம் கட்டணம் பல மடங்காக உயர்வு!

மீனம்பாக்கம்: கோடை விடுமுறை முடிந்து, விரைவில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதால் சொந்த ஊர்களில் இருந்து பலர் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால், விமானங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டணமும் பல மடங்காக உயர்ந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் அண்டை மாநிலங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தாருடன் சொந்த ஊரில் பொழுதை கழித்தனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 12ம் தேதி, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள், குடும்பம் குடும்பமாக மீண்டும் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால், அரசு போக்குவரத்து கழகம் கூடுதலான பஸ்களை இயக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பஸ்களை இயக்குகிறது. அதைப்போல் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியல் 300 வரை தாண்டிவிட்டது. உடனடி முன்பதிவான தட்கலிலும் ரயில் டிக்கெட்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து பயணிகள், விமானங்களை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில், பயணிகள் கூட்டம் பெருமளவு அதிகரித்ததோடு, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

விமானங்களில் இன்றைய விரிவான கட்டண விவரம்:
* மதுரை- சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,629. மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.10,518, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.9,614.
* தூத்துக்குடி- சென்னைக்க சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.4,401. தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.12,380, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல ரூ.9,064
* திருச்சி- சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.2,718. திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.11,549, சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.10,531
* கோவை- சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,485. கோவையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.6,580, சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல ரூ.3,630
* திருவனந்தபுரம்- சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,225. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.8,751, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்ல ரூ.5,583
* கொச்சி- சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.2,889. கொச்சியில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.6,689, சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்ல ரூ.4,049
இவ்வாறு பல மடங்கு, விமான கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டாலும், அவற்றை பொருட்படுத்தாமல் சொந்த ஊர்களில் இருந்து குறிப்பாக தென், மத்திய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பயணிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் பெருமளவு நிரம்பி வழிகிறது.

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எதிரொலி; விமானங்களில் அலைமோதும் கூட்டம் கட்டணம் பல மடங்காக உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: