புரட்டிப்போட்ட கோடை மழை வெள்ளரி விளைச்சல் கடும் பாதிப்பு-தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் : கோடை மழை காரணமாக வெள்ளரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000 பிஞ்சுகள் கிடைக்கும் இடத்தில் தற்போது 200 பிஞ்சுகளே கிடைப்பதால் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்கு நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை. நிலக்கடலை, எள், உளுந்து போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது முன்பட்ட குறுவையான கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுதவிர செண்டிப்பூக்கள், வெள்ளரி, பரங்கிக்காய், புடலங்காய் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரி அறுவடை பணிகளும் நடைபெற்று வருகின்றன. கோடை வெயில் என்பதால் வெள்ளரிக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.தஞ்சாவூர் மாவட்டத்திலும் வரவுகொட்டை பல்வேறு பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமாக சித்திரை மாத தொடக்கத்தில் வெள்ளரி சாகுபடி அதிக அளவில் நடைபெறும். வெள்ளரி சாகுபடி செய்யப்பட்ட 40 நாட்களில் இருந்து 3 மாதம் வரை வெள்ளரி அறுவடை நடைபெறும். தற்போது கோடைகாலம் என்பதால் வெள்ளரிப்பிஞ்சுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலையும் அதிகமாக காணப்படுகிறது.

ஆனால் போதுமான அளவு வெள்ளரி விளைச்சல் இல்லை. காரணம் கடந்த மாதம் கோடை மழை கொட்டித் தீர்த்தது. 4 நாட்களுக்கும் மேல் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக வெள்ளரி சாகுபடி பாதிக்கப்பட்டதால் தற்போது விளைச்சல் குறைவாக உள்ளது.இதுகுறித்து வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள வரவுக்கோட்டையை சேர்ந்த விவசாயி கூறியதாவது:

நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளரி சாகுபடி செய்து வருகிறோம். அதுவும் நாங்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறோம். கடந்த சித்திரை மாதம் தொடக்கத்தில் வெள்ளரி நடவு செய்தோம், நன்றாக செடி வளர்ந்து கொடிபடர்ந்த நிலையில் கோடை மழை கொட்டியதால் கொடிகளை புரட்டி போட்டு விட்டது. இதனால் வெள்ளரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 1000 வெள்ளரிப்பிஞ்சுகள் வரை கிடைக்கும் இடத்தில் தற்போது 200 பிஞ்சுகள் தான் கிடைத்து வருகிறது.

கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தது. தற்போது வெள்ளரி விலை நன்றாக உள்ளது. ஆனால் விளைச்சல் இல்லை. மழையினால் எங்களுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தற்போது கிடைக்கும் வெள்ளரிப்பிஞ்சுகளை நாங்கள் அறுவடை செய்து சாலையோரத்திலேயே விற்பனை செய்து வருகிறோம். வெள்ளரிப்பிஞ்சுகள் நன்றாக இருப்பதால் காரில் வந்து கூட வாங்கி செல்கிறார்கள். அவர்கள் கேட்கும் அளவுக்கு கூட எங்களால் கொடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு விளைச்சல் குறைவாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினர்.

The post புரட்டிப்போட்ட கோடை மழை வெள்ளரி விளைச்சல் கடும் பாதிப்பு-தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: