தேனியின் இயற்கை கொஞ்சும் அழகை கண்டு ரசிக்க சிறப்பு சுற்றுலா வாகனங்கள் இயக்க வேண்டும்

*சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

தேனி : தமிழகத்தின் இயற்கை எழில் சூழந்த இயற்கையின் கொடையான தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க சிறப்பு சுற்றுலா வாகனங்கள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இயற்கைக்கு மயங்காத மனம் ஒன்று இருக்க முடியாது. இயற்கையின் அழகை பாராட்டி கவிதைகள் எழுதாத கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். திரைப்படங்களிலும் அழகிய பாடல்களை படம்பிடிக்க தேடிப்பிடிப்பது இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளைத்தான்.

இயற்கையின் கொடைகளான மேகக்கூட்டம், வானுயர்ந்த மரங்கள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள், நீரோடைகள், இதனைத் தேக்கி வைக்கும் அணைகள், அணைகளுக்கு வரும் பயணிகளை குதூகலிக்கச் செய்யும் சிறுவர் பூங்காக்கள் இவைகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவரும் பன்முகத்தன்மைகள்.

இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலங்களின் எண்ணிக்கையும், சிறுவர் பூங்காக்களும், ஆன்மீகத் தலங்களும் நிறைந்த மாநிலம் கேரளா என்றால், தமிழகத்தில் தேனி மாவட்டம் எனச் சொல்லிவிடலாம்.மதுரையில் இருந்து 80 கிமீ தொலையில் தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தரையையும், வானத்தையும் இணைக்கும் வகையில் மேகங்களை தழுவிச் செல்லும் இயற்கை எழில்கொஞ்சும் பகுதியான மேகமலை, மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சியாக உருவெடுத்து வரும் சுருளி அருவி, சின்னச்சுரூளி அருவி, கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவி, நறுமணப்பொருள்கள் விளைச்சலுடன் இயற்கை அழகை அள்ளிக்கொடுக்கும் குரங்கனி, போடிமெட்டு, வெள்ளி மலை என இயற்கை அழகை கொட்டிக்கொடுக்கும் தேனி மாவட்டத்தில், தேனி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தேனியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரபயணத்தில் அடையக்கூடிய வகையில் மூணாறு, தேக்கடி உள்ளது.

மேகமலை

மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளையும் பல்வேறு வகையான பறவையினங்களையும் மேகமலையில் காணமுடியும். பச்சைப்போர்வையை போர்த்தியதுபோல மேகமலை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். அவ்வப்போது வழிமறிக்கும் யானைகள் புல்லரிக்கச் செய்யும். முன்செல்லும் வாகனங்கள் தெரியாத வகையில் மேகக் கூட்டங்கள் சாலைகளில் படர்ந்து கொள்வது கண்கொள்ளா காட்சியாகும். மேகமலையில் திமுக ஆட்சியின்போது கோடைவிழா நடத்திய பெருமை உண்டு.

சுருளி அருவி

மேகமலை பகுதியில் இருந்து வரும் ஓடைகளின் மூலமாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இரண்டு அடுக்குகளாக தண்ணீர் விழுவதும், எங்குபார்த்தாலும் குரங்குகளின் கூட்டமும் சிறுவர்களை குதூகலமடையச் செய்து வருகிறது. இதேபோல வருசநாடு மலைப்பகுதியில் சின்னச்சுருளி அமைந்துள்ளது. வெள்ளி மலை, வருசநாடு மலைப்பகுதிகளுக்கு வருபவர்கள் சின்னச்சுருளி செல்வதை மறப்பதில்லை. திமுக ஆட்சியின்போது இங்கு சாரல் விழா நடத்திய பெருமை உண்டு.

கும்பக்கரை அருவி

பெரியகுளம் நகரில் இருந்து சுமார் 7 கிமீ தொலையில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இங்கு ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிறஆடை முதல் பாரதிராஜா, கஸ்தூரி ராஜாவின் அநேக படங்களும், விஜயகாந்தின் கேப்டன்பிரபாகரன் மற்றும் டைரக்டர் பாலாவின் பிதாமகன் உள்ளிட்ட படங்களும் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது. எத்தகைய இறுகிய மனம்படைத்தவர்களையும் மயங்கச் செய்யும் சுற்றுலா பகுதியாக கும்பக்கரை அருவி உள்ளது.

குரங்கணி-போடிமெட்டு

போடியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் குரங்கணி உள்ளது. இங்கு விளையும் நறுமன விளைச்சலும், குரங்கனியில் பாய்தோடும் கொட்டக்குடி ஆறும், ஓங்கி உயர்ந்த மரங்களும் குரங்கனியை சுற்றுலா பயணிகளின் நினைவை விட்டு நீங்குவதில்லை. குரங்கனிக்கு மேல்பகுதியான போடி மெட்டு செல்லும் சாலையில் உள்ள ஹேர்பின் பெண்டு வளைவுகளுடன் கூடிய மலைச்சாலை புதிய அனுபவத்தை தருவதாக உள்ளது.

வைகை அணை

தேனியில் இருந்து 18 கிமீ தொலைவில் வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர்ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் வைகை அணை உள்ளது. 70 அடி உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் இந்த அணையில் தண்ணீர் நிரப்பியிருப்பதை காண கண்கோடி வேண்டும்என்பார்கள். இங்குள்ள சிறுவர் பூங்காவானது ஆறு வயது முதல் 60 வயது வரையிலான அனைவரையும் ஈர்க்கும் வகையில் வடகரை, தென்கரை என இரு பூங்காக்கள் சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் தவிர தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேக்கடி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களும் தேனி மாவட்டத்தை சார்ந்து உள்ளது.

மதுரையில் இருந்து தேனிக்கு வர ரயில்சேவையும் உள்ளது. தேனி வந்தடைந்து விட்டால் தேனியை சுற்றியுள்ள இத்தகைய சுற்றுலாத் தளங்களை காண சுற்றுலா வாகனங்கள் தனியாக இல்லாதது பெரும் ஏமாற்றமாகவே சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேனி வருவோர் மாவட்டத்தை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை காண தேனியில் இருந்து தனியாக சுற்றுலா வாகனங்கள் இல்லாததால் ஏமாற்றமடையும் நிலை உள்ளது.

இதனால், தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளங்களை கொண்ட தேனி மாவட்டத்தில் சிறப்பு வாகனங்கள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனியில் இருந்து குரங்கனி, போடிமெட்டு, மூணாறு சென்றுவர ஒரு சிறப்பு வாகனமும், வைகை அணை, சோத்துப்பாறை, சுருளிஅருவி, தேக்கடி சென்று வர தனியாக ஒரு சிறப்பு வாகனமும், வைகைஅணை, சோத்துப்பாறை, கும்பக்கரை, கொடைக்கானல் சென்று வர தனியாக ஒரு சிறப்பு வாகனமும் தேனியில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக நாள்தோறும் சிறப்பு மினி பேருந்துகளாக இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

The post தேனியின் இயற்கை கொஞ்சும் அழகை கண்டு ரசிக்க சிறப்பு சுற்றுலா வாகனங்கள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: