ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போட்டி தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்-கலெக்டர் துவக்கி வைத்தார்

ஊட்டி : ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. இங்கு 300 மாணவர்களுக்கு சிறந்த வல்லுநர்களை கொண்டு 100 நாட்கள் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு செயலாக்க திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி போன்ற போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ‘நான் முதல்வன்’ திட்டம் என்ற ஒரு சிறந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு போட்டி தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு சிறந்த திறன் பயிற்சியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டதாகும். இந்த திட்டத்தின் முதல்கட்டமாக ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சியை மாவட்டந்தோறும் அளிக்க உள்ளது.

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இப்பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 150 மாணவ, மாணவிகளுக்கு 300 மணி நேரம் தனி வழிகாட்டல் 100க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என 100 நாட்களுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி சிறந்த வல்லுனர்களை கொண்டு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும். சனிக்கிழமை அன்று மாதிரி தேர்வு நடத்தப்படும். இப்பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படுகிறது.

போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டுமானால் தினசரி செய்தி தாள்களை படித்து தங்களது பொது அறிவினை வளர்த்து கொள்ள வேண்டும். இதுபோன்ற வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்காது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசே செய்துள்ளது. எனவே தாங்களாகவே முன்வந்து அனைவரும் இதுபோன்று தமிழக அரசால் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

உங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவித்தால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக செய்து தரப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்தூரி, அரசு கலை கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, பணியமர்த்தும் அலுவலர் பாலசுப்பிரமணி, மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் போட்டி தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்-கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: