பவானி – மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாலம் கட்டுமான பணியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்-பொதுமக்கள் அவதி

பவானி : பவானி புதிய பஸ் நிலையம் தொடங்கி மூன்ரோடு வரையில் அடுத்தடுத்து சிறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.பவானி – மேட்டூர் – தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, பவானி – மேட்டூர் சாலையில் பல்வேறு இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பவானி புதிய பஸ் நிலையம் தொடங்கி காமராஜர் நகர்,ராணா நகர்,ஜீவா நகர்,ஊராட்சிக்கோட்டை பேரேஜ்,ஜல்லிக்கல்மேடு, மூன்ரோடு பகுதியில் ரோட்டின் குறுக்கே அடுத்தடுத்து சிறு பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

ரோட்டில் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு,பின்னர் பாலத்தின் மற்றொரு பகுதியில் பள்ளம் தோண்டி பாலம் கட்டப்படுகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக இப்பணிகள் நடைபெற்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலத்துக்கு அருகே ரோட்டில் கொட்டப்படும் மண், ஜல்லி துகள்கள் காற்றில் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் விழுந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

கட்டுமான பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் புழுதி பறக்காத வகையில் அவ்வப்போது தண்ணீர் ஊற்றினாலும், பெரும்பாலான நேரங்களில் புழுதி கிளம்புவதும், பொதுமக்கள் கண்களில் விழுவதும் தொடர்ந்து வருகிறது. மழைக்காலங்களில் இப்பகுதியில் தேங்கும் தண்ணீரால் சேறும், சகதியுமாக மாறும் ரோடுகளில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ரோட்டின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சிறு பாலம் கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும், புழுதி பறக்காத வகையிலும் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பவானி – மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாலம் கட்டுமான பணியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்-பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: