ஆறுமுகநேரியில் எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1125 கிலோ மாம்பழங்கள் அழிப்பு

*உணவு பாதுகாப்பு துறை அதிரடி

தூத்துக்குடி : ஆறுமுகநேரி பகுதியில் எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1125 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் அழித்துள்ளனர்.
சுகாதாரத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா மற்றும் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய புகார் கிடைத்தது.

இதனடிப்படையில் தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் ஒன்றியம், காயல்பட்டினம் நகராட்சி பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் மற்றும் அலுவலர்கள், ஆறுமுகநேரி பகுதியில் சிவநாதன் என்பவருக்குச் சொந்தமான மாம்பழ குடோன்களை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் போது, 1125 கிலோ மாம்பழங்களை அனுமதிக்கப்பட்ட எத்திலீன் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அனுமதிக்கப்படாத முறையினால், பழுக்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அந்த குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும் உறுதிசெய்யப்பட்டது. எனவே, 1125 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து, பேரூராட்சி உதவியுடன் குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமமின்றி இயங்கிய அந்த குடோன்களானது மூடி முத்திரையிடப்பட்டன.

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுப்பொருளை தயாரித்தல், இருப்பு வைத்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். எந்தவொரு வணிகராவது உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத்தொழில் புரிந்தால், உடனடியாக அவ்வளாகம் மூடி முத்திரையிடப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது. உணவு பாதுகாப்பு உரிமத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

The post ஆறுமுகநேரியில் எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1125 கிலோ மாம்பழங்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: